உடம்பு சரில்லன்னு சொல்லிட்டு குழைந்தைகளை இப்படி அடிக்கலாமா – பாகிஸ்தானை புரட்டிய இங்கிலாந்து பற்றி சோயப் அக்தர்

Shoaib Akhtar ENG
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 17 வருடங்கள் கழித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 1ஆம் தேதியன்று ராவில்பிண்டி நகரில் தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி வீரர்கள் இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்க அளவுக்கு முதல் ஓவரிலிருந்தே டி20 இன்னிங்ஸ் விளையாடி உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணியாக கருதப்படும் பாகிஸ்தானை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர்.

குறிப்பாக 233 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஜாக் கிராவ்லி 122 (111) ரன்களும் பென் டன்கட் 107 (110) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அவர்களைத் தொடர்ந்து ஜோ ரூட் 23 ரன்னில் அவுட்டானாலும் ஓலி போப் தனது பங்கிற்கு சதமடித்து 108 (104) ரன்களும் ஹரி ப்ரூக் சதமடித்து 101* (81) ரன்களும் எடுத்ததால் 75 ஓவர்களிலேயே இங்கிலாந்து 506/4 ரன்களை எடுத்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ஆனாலும் கூட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளிலேயே 500 ரன்களை கடந்த முதல் அணி மற்றும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற இரட்டை உலக சாதனைகளை இங்கிலாந்து படைத்தது.

- Advertisement -

உடம்பு சரியில்லன்னு சொன்னாங்க:
அந்தளவுக்கு தார் ரோடு போல அமைக்கப்பட்டிருந்த பிட்ச்சில் லோக்கல் பவுலர்களைப் போல பாகிஸ்தான் பவுலிங்கை புரட்டி எடுத்த இங்கிலாந்து அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறது. முன்னதாக இப்போட்டி துவங்கும் முதல் நாளன்று பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் கரோனா ஏற்பட்டதாக தகவல் வெளியானதால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் தேவையான மருந்துகளை எடுத்துக்கொண்டு கடைசி நேரத்தில் செய்யப்பட்ட சோதனையில் சாதகமான முடிவு வந்ததால் இப்போட்டி திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.

ஆனால் உடம்பு சரியில்லாதவர்களைப் போல் விளையாடாமல் எங்களை அடித்து நொறுக்கும் வகையில் விளையாடுகிறீர்களே இது நியாயமா என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் வெளிப்படையாக பேசியுள்ளார். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அனைவராலும் போற்றப்படும் அவரது சொந்த ஊரில் தங்களது அணியை துவம்சம் செய்த இங்கிலாந்தின் பேட்டிங் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நல்ல வேலையாக செய்திகளின் படி இங்கிலாந்து வீரர்கள் உடம்பு சரியில்லாதவர்களாக உள்ளனர். ஆனால் உடம்பு சரியில்லாத போதும் இவர்கள் 500 ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்றால் ஒருவேளை நல்ல உடல் நிலையுடன் இருந்தால் இன்னும் அடித்து துவைத்திருப்பார்கள். எனவே இப்போதும் நல்லதே நடந்துள்ளது. இங்கிலாந்தின் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மெதுவாக விளையாடுவதை நம்புவதில்லை. அவர் தனது வீரர்களிடம் அதிரடியாக விளையாடுமாரு சொல்லியுள்ளார்”

“அவர் வந்த பின் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதை நிறுத்தவில்லை. மேலும் அறிமுகப் போட்டியில் களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் 7வது இடத்தில் களமிறங்குகிறார். எனவே அவர்களிடம் பேட்டிங் வரிசையில் ஆழம் இருப்பதால் பாகிஸ்தானும் தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். தற்போதைய பாகிஸ்தான் அணியில் நிறைய குழந்தை போன்ற வீரர்கள் உள்ளனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் கருணை காட்டாத ஒன்றாகும். எனவே அதை புரிந்து கொண்டு பாகிஸ்தான் விளையாட வேண்டும். இருப்பினும் எங்களது குழந்தைகளை இங்கிலாந்து அடித்து நொறுக்குவதை என்னால் மகிழ்ச்சியுடன் பார்க்க முடியவில்லை” என்று கூறினார்.

முன்னதாக டி20 உலகக் கோப்பையின் போது இதே இங்கிலாந்து 172 ரன்களையும் விக்கெட் இழப்பின்றி சேசிங் செய்து வென்ற போது உங்களது பவுலிங் மோசமாக இருப்பதால் ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட தகுதியற்றவர்கள் என்று இதே அக்தர் இந்தியாவை கலாய்த்தார். அதனால் இப்போட்டியில் அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சொந்த மண்ணில் உங்களது பவுலிங் என்னவாயிற்று என்று அவருக்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement