வீடியோ : உங்க ஆட்டம் என்கிட்ட வேலையாகாது தம்பி – சச்சினை நேருக்கு நேர் ஸ்லெட்ஜிங் செய்த பின்னணியை பகிரும் சோயப் அக்தர்

shoaib akhtar sachin tendulkar
- Advertisement -

பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது அதிரடியான வேகத்தால் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களையும் திணறடித்த பெருமைக்குரியவர். 90களின் இறுதியில் அறிமுகமாகி 2010 வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்து பாகிஸ்தானுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் அந்த சமயத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், பிரைன் லாரா போன்ற அத்தனை உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் என்றே கூறலாம். குறிப்பாக பவுண்டரி எல்லை அருகே இருந்து வேகமாக ஓடி வந்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்து வீசும் அவர் பரம எதிரியான இந்தியாவின் பேட்ஸ்மேன்களை கண்டால் வேண்டுமென்றே அதிகப்படியான வேகத்தில் வீசுவார்.

அதிலும் குறிப்பாக இந்தியாவை தோற்கடிக்க முதலில் சச்சினை சாய்க்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லையையும் தொடுவதற்கு தயங்காத அவர் எதுவுமே வேலையாகவில்லை என்றால் பவுன்சர், பீமர் போன்ற பந்துகளை வீசி மனதளவில் அச்சுறுத்தலை கொடுத்து அவுட்டாக்க நினைப்பார். அதற்கு 2003 உலக கோப்பையில் பறக்க விட்ட சிக்சர் உட்பட நிறைய தருணங்களில் சச்சின் டெண்டுல்கர் பதிலடி கொடுத்துள்ளார் என்றாலும் அதற்கு நிகராக சோயப் அக்தரும் நிறைய தருணங்களில் அவரை அவுட்டாக்கி இந்திய ரசிகர்களின் மனதை உடைத்து வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

நேருக்கு நேர்:
அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் – சோயப் அக்தர் மோதல் என்பது 90 கிட்ஸ் ரசிகர்களின் மறக்க முடியாத அனுபவம் என்றே சொல்லலாம். அந்த மோதல்களில் கடந்த 1999ஆம் ஆண்டு கொல்கத்தா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மோதல் மறக்க முடியாத ஒன்றாகும். ஏனெனில் அப்போட்டியின் 2வது நாளில் ராகுல் டிராவிட்டை 24 ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கிய அக்தர் 1998ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற கொக்ககோலா கோப்பையை வென்று கொடுத்து உச்சகட்ட ஃபார்மில் இருந்த சச்சின் டெண்டுல்கரை முதல் பந்திலேயே க்ளீன் போல்ட்டாக்கி கோல்டன் டக் அவுட் செய்து பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத இந்தியா கடைசியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்நிலையில் அந்த சமயத்தில் கிரிக்கெட்டின் கடவுளாக இருந்த சச்சின் டெண்டுல்கரை முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் செய்த காரணத்தாலேயே தமக்கு உலக அளவில் பெயர் கிடைத்ததாக சோயப் அக்தர் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக நீங்கள் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் தம்முடைய வேகத்திற்கு முன்பு ஈடு கொடுக்க முடியாது என்று சச்சினிடம் நேருக்கு நேராக சொன்னதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனுடன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சச்சின் டெண்டுல்கரை முதல் பந்திலேயே அவுட் செய்த போட்டிக்கு பின்பு தான் எனக்கு உலக அளவில் நிறைய பெயர் கிடைத்தது. அப்போட்டிக்கு முன்பாக நிறைய இந்திய வீரர்களை சந்தித்த நான் “கிரிக்கெட்டின் கடவுளை (சச்சினை) நான் பார்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தேன். அவர்கள் அதற்கு நீங்கள் அவரைப் பார்த்ததில்லையா என்று பதிலளித்தார்கள். அப்போது இல்லை நான் அவரை முதல் பந்திலேயே அவுட் செய்த காரணத்தால் நேரில் பார்க்க விரும்புகிறேன் என்று அவர்களிடம் கூறினேன். பொதுவாகவே சச்சின் டெண்டுல்கர் இந்த உலகிலேயே மென்மையான குணத்தை கொண்ட மிகச் சிறந்த பேட்ஸ்மேன்”

“இருப்பினும் அன்றைய நாளில் அவரிடம் சென்று அவரை பார்த்த நான் “பிரதர். என்னிடம் அவுட்டாவது தவிர்த்து உங்களுக்கு வேறு எந்த வாய்ப்புமில்லை என்று கூறினேன்”. ஏனெனில் அவரை நான் முதல் பந்திலேயே அவுட் செய்திருந்தேன். மேலும் வரலாற்றிலேயே முதல் முறையாக அப்போட்டியில் தான் 70000 – 80000 ரசிகர்கள் மைதானத்திலிருந்து வெளியேறினார்கள். என்னால் அந்த போட்டி 2 மணி நேரம் தாமதமானது. சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் இருந்த அப்போட்டியில் திடீரென்று யாருமே இல்லை” என்று கூறினார்.

ஆனால் அப்போட்டியில் 2வது இன்னிங்ஸில் ஓடுவதை தடுத்து நிறுத்தும் வகையில் செயல்பட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கு மத்தியில் சச்சின் ரன் அவுட்டான காரணத்தாலேயே கோபமடைந்த கொல்கத்தா ரசிகர்கள் “சீட்டர், சீட்டர்” என்று முழங்கி போட்டியை நடத்த விடாமல் பின்னர் வெளியேறினார்கள். இருப்பினும் தம்மால் தான் அப்போட்டி தாமதமானது என்று சோயப் அக்தர் உருட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement