
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 242 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சவுத் சாக்கில் 69 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் 20, சுப்மன் கில் 46, ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்கள் எடுத்தார்கள். அவர்களுடன் நங்கூரமாக விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஃபார்முக்கு வந்து சதத்தை அடித்து 100* ரன்கள் குவித்தார். அதனால் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா இத்தொடரின் செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
மறுபுறம் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தும் அடுத்தடுத்த தோல்விகளால் செமி ஃ பைனல் வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்துள்ளது. இந்நிலையில் எவ்வளவு தான் சுமாரான ஃபார்மில் இருந்தாலும் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டி நடைபெற்றால் விராட் கோலி ஃபார்முக்கு வந்து விடுவார் என்று முன்னாள் வீரர் சோயப் அக்தர் கலகலப்பாக பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“விராட் கோலியிடம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறோம் என்று நீங்கள் சொன்னால் அவர் முழுமையாக தயாராகி சதத்தை அடிப்பார் என்பதை மீண்டும் நாம் பார்த்துள்ளோம். அவருக்கு தலை வணங்குகிறேன். சூப்பர்ஸ்டார் போன்ற அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகவும் சிறந்த சேசர். அவர் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான் என்பதில் சந்தேகமில்லை”
“நேர்மையான மனிதனான அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று ஒருநாள் கிரிக்கெட்டில் 14000 ரன்களையும் கடந்துள்ள அவர் 100 சர்வதேச சதங்கள் அடிப்பார் என்று நம்புகிறேன். அவர் அதை செய்வதை நான் விரும்புகிறேன். இந்தப் பாராட்டுக்களுக்கு தகுதியானவரான அவருக்கு நான் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்”
இதையும் படிங்க: ஐசிசி தொடரில் பாகிஸ்தானை வெளுப்பதில் உலக சாதனை.. பாண்டிங் வாழ்நாள் சாதனையை உடைத்த கிங் கோலி
“விராட் கோலியின் கடின உழைப்பைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். மொத்த உலகமும் ஃபார்மில் இல்லை என்று சொல்லிக் காத்திருந்த போது பெரிய போட்டியில் வந்த விராட் கோலி எளிதாக ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அவருடைய கடின உழைப்பு மற்றும் ஃபிட்னஸ் லெவலை நான் பாராட்டுவேன். பாகிஸ்தான் அணி அவரை அவுட் செய்ய முயற்சித்தது. ஆனால் நம்மை விட சிறப்பாக விளையாடிய அவர் இதற்காக பின்புலத்தில் நிறைய கடின உழைப்பைப் போட்டுள்ளார்” என்று கூறினார்.