வீடியோ : வெற்றி மமதையில் தெ.ஆ’வை பெரிய சோக்கர் என கிண்டலடித்த முன்னாள் பாக் வீரர் – இந்தியாவை பழி தீர்க்க உறுதி

SA vs PAk Babar Azam
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்று நிறைவு பெற்றுள்ளது. அதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க முடியாமல் வெளியேறிய நிலையில் குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதே போல் குரூப் 2 பிரிவில் இந்தியாவுடன் அரையிறுதிக்கு செல்ல காத்திருந்த தென்னாப்பிரிக்கா தன்னுடைய கடைசி போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்திலும் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் தென் ஆப்பிரிக்காவின் தோல்வி பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக மாறியது.

ஏனெனில் முதல் போட்டியிலேயே கையில் வைத்திருந்த வெற்றியை பரம எதிரியான இந்தியாவிடம் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் தாரை வாழ்த்த அந்த அணி 2வது போட்டியில் கத்துக்குட்டி ஜிம்பாப்வேவிடம் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்று கிண்டல்களுக்கும் அவமானத்திற்கு உள்ளானது. அத்துடன் அப்போதே அரையிறுதி வாய்ப்பும் 90% பறிபோனாலும் மனம் தளராத அந்த அணி அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று அதிர்ஷ்டத்துக்காக காத்திருந்தது. இறுதியில் வேண்டுதலுக்கு ஏற்றார் போல் தென் ஆப்பிரிக்கா வெளியேறியதால் தன்னுடைய கடைசி போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்த பாகிஸ்தான் யாருமே எதிர்பாராத வகையில் அரையிறுதிக்கு 4வது அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது.

- Advertisement -

பெரிய சோக்கர்:
அதனால் தங்களுக்கு மிகப்பெரிய உதவி செய்த கடவுளுக்கு தெரிவிக்கும் நன்றிக்கு சமமான நன்றியை நெதர்லாந்துக்கும் பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் தெரிவித்து வருகிறார்கள். மறுபுறம் வரலாற்றில் காலம் காலமாக இது போன்ற உலகக் கோப்பைகளில் முக்கிய தருணங்களில் சொதப்பி வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ள தென்னாப்பிரிக்காவை ஏற்கனவே கிரிக்கெட் வல்லுனர்கள் “சோக்கர்” என்று அழைப்பது வழக்கமாகும். அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த அந்த அணியை தற்போது நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கிண்டலடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோற்று வெளியேறிய தென் ஆப்பிரிக்காவை மிகப்பெரிய சோக்கர் என்று கூறும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் தங்களது அணி அரையிறுதி செல்வதற்காக வழிவிட்டதற்கு நன்றியை தெரிவித்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் பேசியது பின்வருமாறு. “நான் இப்போது தான் எழுந்தேன். மிகவும் நன்றி தென்னாப்பிரிக்கா. பாகிஸ்தானுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்ததால் நீங்கள் மிகப்பெரிய சோக்கர்களாக இருக்கிறீர்கள். இது மிகப்பெரிய உதவி. இனி பாகிஸ்தான் செய்ய வேண்டியது எல்லாம் அடுத்த வரும் போட்டிகளில் வெல்வது மட்டுமே ஆகும்”

- Advertisement -

“ஏனெனில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக தோற்ற பின் பாகிஸ்தான் இந்த இடத்திற்கு வருவதற்கு தகுதியான அணி என்று நான் நினைக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய லாட்டரி அடித்துள்ளது. அதே சமயம் வங்கதேசத்திடம் நல்ல வீரர்கள் இருந்தாலும் நாங்கள் இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டியுள்ளது. மேலும் இந்தியாவை மீண்டும் நாங்கள் சந்திப்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று கூறினார். அதாவது அரை இறுதிக்கு செல்ல உதவி செய்துள்ள தென்னாப்பிரிக்காவுக்கு நன்றி தெரிவிக்கும் அவர் வெற்றி மமதையில் மிகப்பெரிய சோக்கர் என்றும் அழைத்துள்ளார்.

அதை விட முதல் போட்டியில் தங்களுக்கு வரலாற்றுத் தோல்வியை பரிசளித்த இந்தியாவை அரையிறுதி சுற்றில் வென்று மீண்டும் பைனலில் சந்தித்து தோற்கடித்து பழி தீர்த்து கோப்பையை வெல்ல வேண்டும் எனவும் பாகிஸ்தான் அணியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வகையில் 2007 போல் மீண்டும் உலகக்கோப்பை பைனலில் இந்தியா – பாகிஸ்தான் மோதுமா என்ற எதிர்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement