
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற இந்திய அணி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஒரு போட்டியில் மட்டுமே தோற்று மற்ற போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இறுதிவரை சென்று கோப்பையைப் கைப்பற்றியிருந்தது.
இதன் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. அதோடு அவர்களுக்காக பரிசுத்தொகையும் பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது இந்திய அணியின் வீரர்களுக்கு அவர்களது சொந்த ஊரில் சிறப்பான வரவேற்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது.
ஒருபுறம் இந்திய வீரர்கள் பலரும் விமான மூலம் வீடு திரும்பிய வேளையில் அவரவர் சொந்த மாநிலத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஷிவம் துபே விமானம் மூலம் பயணிக்காமல் மும்பைக்கு அகமதாபாத்தில் இருந்து ரயில் மூலம் பயணித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் இதுகுறித்து பேசிய ஷிவம் துபே கூறுகையில் : இறுதி போட்டி முடிந்த கையோடு அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு விமானத்தின் மூலம் பயணிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் டிக்கெட் கிடைக்காததால் விரைவு ரயிலில் உயர்ரக சொகுசு பிரிவில் நானும் எனது மனைவியும் பயணித்தோம். அப்போது நான் முகக் கவசம் மற்றும் தொப்பி அணிந்து மேலே படுக்கையில் படுத்து கொண்டேன்.
இதையும் படிங்க : டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை இழந்த வருண் சக்கரவர்த்தி – முதலிடம் பிடித்த பவுலர் யார்?
ஆனால் டிக்கெட்டில் ஷிவம் துபே என்ற பெயரை பார்த்து டிக்கெட் பரிசோதகர் கிரிக்கெட் வீரரா? என்று கேட்கவே அந்த நேரத்தில் என்னுடைய மனைவி அவர் ஏன் ரயிலில் வரப்போகிறார்? என்று கூறி சமாளித்தார். ஆனால் நாங்கள் இருவருமே ரயில் மூலம் தான் மும்பைக்கு திரும்பினோம் என்று ஷிவம் துபே சுவாரசிய தகவலை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.