
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 17ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் 4வது போட்டியில் வென்று முன்கூட்டியே தொடரை கைப்பற்ற இந்திய அணி தயாராக இருக்கிறது.
மறுபுறம் இந்திய அணியை தோற்கடித்து தொடரை சமன் செய்ய தென்னாப்பிரிக்கா தயாராக இருக்கிறது. முன்னதாக கேப்டன் சூரியகுமார் யாதவ், துணைக் கேப்டன் சுப்மன் கில் மோசமான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது. அதில் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் தடுமாற்றமாக விளையாடி வரும் சூரியகுமார் 2025இல் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் திணறி வருகிறார்.
அதே போல கில் கடைசியாக விளையாடிய 18 டி20 போட்டிகளில் அரை சதமடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் அவர்கள் மோசமான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனியாளக 5க்கு 5 போட்டிகளை வென்று கொடுக்கக்கூடிய திறமை கொண்ட சூரியகுமார் போராளி என்று சிவம் துபே தெரிவித்துள்ளார்.
அதனால் விரைவில் சூரியகுமாரும், கில்லும் ஃபார்முக்கு திரும்பி விடுவார்கள் என்று துபே நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இது பற்றி துபே பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் தன்னுடைய சொந்த முயற்சியில் 5க்கு 5 வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய வீரர். ஃபார்மில் இல்லை என்பதற்காக அவர் மோசமான வீரர் ஆகிவிட மாட்டார். மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான அவரால் முடிவது மற்றவர்களால் எளிதில் செய்ய முடியாது”
“ஆம் தற்சமயத்தில் அவர் ரன்கள் அடிக்கவில்லை. ஆனால் அவருடைய ஃபார்ம் சரியான நேரத்திற்கு வரும். அவர் எந்த நேரத்திலும் அசத்துவார். போராளியான அவர் எப்போதும் மாற மாட்டார். ஆக்கபூர்வமான வீரரான அவர் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலை கொடுக்கக்கூடிய 360 டிகிரி பிளேயர். சுப்மன் கில் ஃபார்ம் மேலேயும் கீழேயும் சென்றாலும், சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் நன்றாக இருக்கிறது”
இதையும் படிங்க:4-ஆவது போட்டியிலும் பும்ரா விளையாட வாய்ப்பில்லை.. எப்போது அணிக்கு திரும்புவார்? – வெளியான தகவல்
“இந்தியாவுக்காக அவர் சமீபத்திய வருடங்களில் அசத்தி வருகிறார். இருப்பினும் உங்களது ஆட்டத்தில் மேடு பள்ளங்கள் ஏற்படுவது விளையாட்டில் ஒரு அங்கமாகும். அதையும் தாண்டி அவர் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்” என்று கூறினார். அத்துடன் இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்கு செட்டிலாகி வருவதாக தெரிவித்த துபே தம்முடைய ஃபிட்னஸில் கவனம் செலுத்த பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் உதவுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.