இந்திய நட்சத்திர வீரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த அவர் 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி ஆரம்பக் காலங்களில் ஆர்டரில் விளையாடி தடுமாறிக் கொண்டிருந்தார். அப்போது அவரை 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மாவுடன் கேப்டன் எம்எஸ் தோனி துவக்க வீரராக களமிறக்கினார்.
அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய ஷிகர் தவான் தங்க பேட் விருது வென்று 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல உதவினார். அப்போதிலிருந்து 2015 உலகக் கோப்பை போன்ற ஐசிசி தொடர்களில் அபாரமாக விளையாடிய அவர் 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறினார்.
தோனிக்கு நன்றி:
அதனால் மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர் காயத்திலிருந்து குணமடைந்த பின் அதிரடியாக விளையாடத் தடுமாறினார். அதன் காரணமாக இந்திய அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்ட அவருக்கு போட்டியாக தற்போது ஜெய்ஸ்வால் போன்ற பல இளம் கிரிக்கெட் வீரர்கள் வந்துள்ளனர். அதனால் தற்போது வருங்காலத்தை கருத்தில் கொண்டு 38 வயதில் ஓய்வு பெறுவதாக தவான் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு சோகமாக அமைந்தது.
இந்நிலையில் 2013ஆம் ஆண்டு மொஹாலியில் தனது அறிமுக டெஸ்ட் மற்றும் 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த சதங்கள் மிகவும் பிடித்தது என்று தவான் தெரிவித்துள்ளார். மேலும் ஆரம்ப காலங்களில் தமக்கு ஆதரவு கொடுத்த தோனிக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கு பிடித்த எனது இன்னிங்ஸ் ஒன்றுக்கும் மேல் உள்ளது”
சிறப்பாக தவான்:
“முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக என்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் 187 ரன்கள் அடித்ததாகும். குறிப்பாக 85 பந்துகளில் சதமடித்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த வீரராக உலக சாதனை படைத்தது பற்றி எனக்கு தெரியாது. அதே போல 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி. அப்போட்டியில் 25 ரன்கள் எடுத்திருந்த போது பந்து 150 கி.மீ வேகத்தில் எனது இடது கட்டை விரலை தாக்கியது.
இதையும் படிங்க: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெல்லாம் கிடையாது.. நான் சொன்ன அறிவிப்பு இதுதான்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வாய்த்த கே.எல் ராகுல்
“அதனால் காயமடைந்த நான் வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு தொடர்ந்து பேட்டிங் செய்தேன். அப்போட்டியில் 109 பந்துகளில் 117 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றேன். 2015 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 137 ரன்களும் பிடிக்கும். எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்த என்னுடைய கேப்டன் எம்எஸ் தோனிக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். குறிப்பாக 2015 உலகக் கோப்பைக்கு முன் நான் சுமாராக விளையாடி தடுமாறிய கடின காலங்களில் அவர் எனக்கு ஆதரவு கொடுத்தார்” என்று கூறினார்.



