இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெல்லியை சேர்ந்த அவர் கடந்த 2004 அண்டர்-19 உலகக் கோப்பையில் 505 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதே போல உள்ளூர் கிரிக்கெட்டிலும் அசத்திய அவர் 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி டக் அவுட்டானார்.
அப்படி ஆரம்பக் காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்த அவரை 2013 சாம்பியன் டிராபியில் ரோஹித் சர்மாவுடன் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி ஓப்பனிங்கில் களமிறக்கினார். அந்த வாய்ப்பில் அபாரமாக விளையாடிய ஷிகர் தவான் தங்க பேட் விருது வென்று இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே 85 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார்.
ஷிகர் தவான் ஓய்வு:
மேலும் 2015 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனை படைத்த அவர் 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் மீண்டும் தங்க பேட் விருது வென்று ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். அத்துடன் 2018 ஆசிய கோப்பை மற்றும் நிதஹாஸ் கோப்பை முத்தரப்பு தொடரில் தொடர்நாயகன் விருதுகளை வென்ற அவர் இந்தியா சாம்பியன் பட்டங்களை வெல்ல முக்கிய பங்காற்றினர்.
இருப்பினும் 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்த அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறினார். ஆனால் அந்த காயத்துக்கு பின் குணமடைந்த அவர் மீண்டும் அதிரடியாக விளையாட தடுமாறினார். அதனால் அவரை பிசிசிஐ கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட்டு வந்தது.
விடைபெற்ற மிஸ்டர் ஐசிசி:
தற்போது கில், ருதுராஜ், ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா போன்ற நிறைய இளம் வீரர்கள் போட்டிக்கு விட்டார்கள். அதன் காரணமாக 38 வயதை கடந்துள்ள ஷிகர் தவான் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு வருங்காலத்திற்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “இது எனக்கு மிகவும் கடினமான முடிவு. நான் அழ விரும்பவில்லை”
இதையும் படிங்க: ராகுல் டிராவிடின் வாழ்க்கையை மையமாக வைத்து பயோபிக் திரைப்படம் எடுத்தால் யார் ஹீரோ – அவரே அளித்த பதில்
“ஆனால் அது பெரும்பாலும் நன்றி மற்றும் அன்பை பொறுத்தது. எனது வாழ்நாளில் பெரும் பகுதியை கிரிக்கெட்டில் செலவழித்துள்ளேன். தற்போது சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நேரத்தை அடைந்து விட்டதாக உணர்கிறேன்” என்று கூறியுள்ளார். அந்த வகையில் மிஸ்டர் ஐசிசி என்றழைக்கப்படும் ஓய்வு பெற்றது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள அவர் இந்தியாவுக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள், 68 டி20 போட்டிகளில் 2315, 6793, 1759 ரன்களையும் மொத்தம் 24 சதங்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



