IND vs WI : 90களில் அவுட்டாகி பரிதாப சாதனை படைத்தாலும் ரசிகர்களை மகிழ்வித்த ஷிகர் தவான் – வைரல் வீடியோ

Shikahr Dhawan
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 22-ஆம் தேதியான நேற்று துவங்கியது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 308/7 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் 119 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கபோது 6 பவுண்டரி 2 சிக்சருடன் 64 (53) ரன்களில் கில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் 2-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மேலும் வலுப்படுத்தி நிலையில் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 97 (99) ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அடுத்த சில ஓவர்களில் ஸ்ரேயாஸ் அய்யரும் 54 (57) ரன்களில் அவுட்டானபோது களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 13 (14) ரன்களிலும் சஞ்சு சாம்சன் 12 (18) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அதனால் 350 ரன்களை அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்ட இந்தியாவுக்கு கடைசியில் தீபக் ஹூடா 27 (32) ரன்களும் அக்ஷர் பட்டேல் 21 (21) ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் மோட்டி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

த்ரில் வெற்றி:
அதை தொடர்ந்து 309 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு தொடக்க வீரர் ஷாய் ஹோப் 7 (18) ரன்களில் அவுட்டானாலும் அடுத்து ஜோடி சேர்ந்த ப்ரூக்ஸ் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் 2-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பர்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருப்பினும் முக்கிய நேரத்தில் ப்ரூக்சை 46 (61) ரன்களில் அவுட் செய்த இந்தியா அடுத்த சில ஓவரில் கெய்ல் மேயர்சை 75 (68) ரன்கள் காலி செய்தது. அதன்பின் வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் 25 (26) ரன்களிலும் இளம் வீரர் ரோவ்மன் போவல் 6 (7) ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

இருப்பினும் மிடில் ஆர்டரில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 54 (66) ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடிய பிரண்டன்  கிங் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்ததார். ஆனாலும் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டிய அகில் ஹொசைன் 32* (32) ரன்களும் ரோமரியா ஷெபார்ட் 39* (25) ரன்களும் குவித்து இந்தியாவிற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெற்றிக்கு போராடினார்கள்.

- Advertisement -

தவானின் பரிதாம்:
அதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் 15 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட போது அதை வீசிய முகமது சிராஜ் தட்டுத் தடுமாறினாலும் 11 ரன்களை மட்டுமே கொடுத்ததால் 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 305/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் காரணமாக வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை வசமாக்கிய இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் சிராஜ், தாகூர், சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

இந்த வெற்றிக்கு கேப்டனாக முன்னின்று 97 ரன்கள் குவித்து அசத்திய ஷிகர் தவான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஒரு காலத்தில் ரோகித் சர்மாவின் நிரந்தர பார்ட்னராக இருந்த இவருக்கு சமீப காலங்களில் கேஎல் ராகுல் வருகையால் நிரந்தரமான இடம் பறிபோனது. தற்போது 36 வயதை கடந்துள்ள அவர் அதற்காக மனம் தளராமல் கிடைக்கும் வாய்ப்புகளில் இதுபோல அட்டகாசமாக செயல்பட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் நான் சோடை போகவில்லை என்றும் 2023 உலக கோப்பையில் தொடக்க வீரராக களமிறங்க தகுதியுடையவராகவும் நிரூபித்துக் கொண்டே வருகிறார்.

- Advertisement -

இருப்பினும் இப்போட்டியில் ரசிகர்கள் பரிதாபப்படும் வகையில் வெறும் 3 ரன்களில் சதத்தை நழுவ விட்ட அவர் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் 5 முறை 90களில் அவுட்டாகியுள்ளார். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 90களில் அவுட்டான 2-வது இந்திய வீரர் என்ற பரிதாப சாதனையை கங்குலியுடன் பகிர்ந்து கொண்டார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 17
2. ஷிகர் தவான்/சௌரவ் கங்குலி : 6
3. விராட் கோலி/விரேந்தர் சேவாக் : 5

மேலும் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் 90களில் அவுட்டான 3-வது இந்தியர் என்ற வீரேந்திர சேவாக் சாதனையையும் சமன் செய்தார். அந்தப் பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 27
2. ராகுல் டிராவிட் : 12
3. ஷிகர் தவான்/விரேந்தர் சேவாக் : 10
4. சௌரவ் கங்குலி : 9

அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் எம்எஸ் தோனிக்கு (95, 2009இல்) பின் 90களில் அவுட்டான 2-வது இந்திய கேப்டன் என்ற பெயரையும் அவர் பெற்றார். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் 150 இன்னிங்ஸ்களுக்குப் பின் அதிக ரன்கள் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 6537
2. ஷிக்கர் தவான் : 6422*
3. சௌரவ் கங்குலி : 6044

இப்படி சாதனைகளுடன் 90களில் அவுட்டான வருத்தம் கொஞ்சமும் இல்லாத அவர் ஃபீல்டிங் செய்யும்போது ஒரு பந்தை தடுத்து நிறுத்தி விட்டு அதன் மேல் தண்டால் செய்யும் வீடியோ ரசிகர்களை மகிழ்வித்து வைரலாகி வருகிறது.

Advertisement