
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அந்த அணியில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது பல விமர்சனங்களை எழுப்பியது. அதே போல தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்படாததற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால் இம்முறையும் கோப்பையை வெல்வது கடினம் என்று இந்திய ரசிகர்களே அதிருப்தியில் இருக்கின்றனர். அத்துடன் ஏற்கனவே 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் இந்திய அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. அதன் உச்சமாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஃபைனல்களில் ஆஸ்திரேலியாவிடம் சொதப்பிய இந்தியா கோப்பையை கோட்டை விட்டது.
தவான் நம்பிக்கை:
எனவே இம்முறை கோப்பையை வென்றால் பார்க்கலாம் என்ற இந்திய ரசிகர்கள் நம்பிக்கையற்று காணப்படுகின்றனர். இந்நிலையில் 2007 முதல் 2024 வரை இதுவரை நடைபெற்ற அனைத்து டி20 உலகக் கோப்பைகளிலும் விளையாடிய ரோகித் சர்மாவிடம் ஏகப்பட்ட அனுபவம் இருப்பதாக ஷிகர் தவான் கூறியுள்ளார். எனவே அந்த அனுபவத்தை வைத்து இந்தியாவுக்கு இம்முறை ரோகித் சர்மா உலகக் கோப்பையை வென்று கொடுப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதற்கு உதவியாக விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் துணையாக நிற்பார்கள் என்று தெரிவிக்கும் அவர் இதுப் பற்றி பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கு நிறைய அழுத்தம் இருக்கும். ரோஹித் சர்மா மிகவும் அனுபவமிக்கவர். எனவே அவருடைய அனுபவம் உதவி செய்யும் என்று நான் உறுதியாக சொல்வேன்”
“அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்பது அவருக்கு தெரியும். அதைப் பயன்படுத்தி இந்தியா வெற்றிக்கான வண்ண நிறத்துடன் வெளிவரும். ரோகித்தை தவிர்த்து விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமானவர்கள் என்று நான் கருதுகிறேன். விராட் கோலி சேஸ் மாஸ்டர். அவர் களத்தில் இருப்பதே எதிரணிகளின் நம்பிக்கையை குலைக்கக்கூடியதாகும்”
இதையும் படிங்க: இந்த விதிமுறையால் தான் அஸ்வின் மாதிரி பவுலர்ஸ் ஒன்டே கிரிக்கெட்டில் காணாம போய்ட்டாங்க.. கம்பீர் விமர்சனம்
“பும்ரா தற்சமயத்தில் 3 விதமான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடிய உலகின் சிறந்த பவுலர். எனவே இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் அவர் முக்கிய பங்கு வகிப்பார்” என்று கூறினார். இது போக உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ், தரமான ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட் – சஞ்சு சாம்சன் ஆகியோரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு பலத்தை சேர்ப்பது குறிப்பிடத்தக்கது.