இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் தனது அற்புதமான பவுலிங் மற்றும் பேட்டிங்கை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் 2018 ஆம் ஆண்டு அறிமுகமாகியிருந்த இவர் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயம் அடைந்து வெளியேறினார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது தான் அவருக்கு டெஸ்ட் போட்டியில் இடம் கிடைத்தது.
இந்திய அணி 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் தத்தளித்த போது வாஷிங்டன் சுந்தர் உடன் இணைந்து அவர் சிறப்பாக விளையாடி 67 ரன்கள் குவித்து 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். சுந்தர் மற்றும் தாகூரின் பாட்னர்ஷிப்பினால் தான் இந்திய அணி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர்க்கு நெருங்கியது. அப்போது இவர்கள் இருவரது ஆட்டமும் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.
பேட்டிங்கில் மட்டுமின்றி பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட தாகூர் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் தான் ஒரு பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னால் பந்து வீசுவது மட்டுமின்றி பேட்டிங் செய்யும் திறமையும் இருக்கிறது. என்னை பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என அழைக்கலாம்.
ஏனெனில் என்னால் பேட்டிங் செய்ய இயலும். எப்பொழுதெல்லாம் எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அணிக்கு தேவையான வகையில் ரன்களை சேர்ப்பேன். இனிவரும் காலத்திலும் இந்திய அணிக்காக ரன்களை தொடர்ந்து அடிப்பேன் என்று தாகூர் கூறினார். இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு இந்த போராட்டம் குணம் எங்கிருந்து வந்தது என கேட்கப்பட்ட கேள்விக்கு தாகூர் அளித்த பதிலில் :
தோனியிடம் இருந்துதான் சில விடயங்களை நான் கற்றுக்கொண்டேன். இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு விளையாடுவது என்பது தோனியிடம் இருந்து நான் அறிந்ததாகும். அதன் மூலமாகவே தான் சிறப்பாக விளையாட முடிவதாக தாகூர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.