இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20ஆம் துவங்கும் அந்தத் தொடருக்குத் தயாராகும் நோக்கத்தில் இந்தியா ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய 2 பயிற்சி போட்டிகள் டிராவில் முடிந்தன. அதைத்தொடர்ந்து இந்தியா ஏ மற்றும் இந்தியா அணிகள் மோதிய பயிற்சி போட்டி கென்ட் நகரில் நடைபெற்றது.
ஜூன் 12ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் கேப்டன் சுப்மன் கில், கே.எல் ராகுல் ஆகியோர் அரை சதத்தை அடித்து அசத்தினார்கள். அவர்களைக் காட்டிலும் 2வது நாளில் அபாரமாக விளையாடிய சர்பராஸ் கான் 15 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உட்பட 76 பந்தில் சதத்தை அடித்து மிரட்டினார். கடந்த இங்கிலாந்து தொடரில் அறிமுகமான அவர் நியூசிலாந்து தொடரில் சதத்தை அடித்து அசத்தினார்.
தாக்கூர் மிரட்டல்:
இருப்பினும் அதன் பின் பெரிய ரன்களை எடுக்கத் தவறிய அவரை இங்கிலாந்து தொடரில் பிசிசிஐ கழற்றி விட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அரை சதத்தை அடித்த அவர் தற்போது இப்போட்டியில் சதத்தை அடித்து தன்னை தேர்ந்தெடுக்காத தேர்வுக்குழுவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர்கள் அனைவரையும் விட 3வது நாளில் சர்துள் தாக்கூர் அதிரடியாக விளையாடினார்.
2வது நாளின் முடிவில் 19 ரன்களுடன் ஆட்டத்தைத் துவக்கிய அவர் 3வது நாளில் ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ் உள்ளிட்ட அவர்களை அடித்து நொறுக்கினார். பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரையும் அடித்து நொறுக்கிய அவர் 122 ரன்கள் குவித்து அசத்தினார். அந்த சூழ்நிலையில் ஜூன் 16ஆம் தேதி நடைபெறவிருந்த 4வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
நிதிஷ் ரெட்டிக்கு போட்டி:
அதைப் பார்க்கும் ரசிகர்கள் லார்ட் தாகூர் போட்டியையே ரத்து செய்யும் அளவுக்கு அபாரமாக விளையாடியுள்ளதாக சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள். 2021 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மிகச்சிறப்பாக விளையாடிய அவர் லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் ஆல் ரவுண்டராக இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதற்கு முன்பாக 2021 காபா டெஸ்ட் போட்டியில் இந்தியா சரித்திர வெற்றியைப் பெற உதவிய தாக்கூர் அதற்கடுத்த போட்டிகளில் சுமாராக விளையாடியதால் கழற்றி விடப்பட்டார்.
இதையும் படிங்க: இங்கிலாந்து தொடரில் அசத்தப்போகும் இந்திய போர் குதிரை அவர் தான்.. மறந்துடாதீங்க – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
ஆனால் கடந்த ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட அவர் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். அந்த வாய்ப்பில் தற்போது பயிற்சிப் போட்டியில் அசத்தியுள்ள அவருக்கு இங்கிலாந்து தொடரில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் சூழல்கள் உருவாகியுள்ளது. குறிப்பாக கடந்த ஆஸ்திரேலிய அறிமுகமாகி அசத்திய நித்திஷ் ரெட்டிக்கு போட்டியாக தாகூர் வந்துள்ளார்.



