மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சர்துள் தாகூர் 2018 ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை வெல்வதற்கு உதவினார். அதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டிலும் 3 வகையான ஃபார்மெட்டில் அறிமுகமான அவர் கணிசமாக அசத்தினார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2021 காபா, லண்டன் ஓவல் மைதானங்களில் இந்தியா பதிவு செய்த மறக்க முடியாத வெற்றிகளில் அவர் ஆல் ரவுண்டராக பங்காற்றினார்.
அதன் காரணமாக ரசிகர்கள் அவரை லார்ட் என்று அன்போடு அழைத்தார்கள். இருப்பினும் சமீபத்திய வருடங்களில் பந்து வீச்சில் கொஞ்சம் ரன்களை வாரி வழங்கிய காரணத்தால் இந்திய அணி அவரை 2023 டிசம்பருடன் கழற்றி விட்டுள்ளது. அதேக் காரணத்தால் 2025 ஐபிஎல் தொடரிலும் அவரை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை. ஆனாலும் மனம் தளராத தாக்கூர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி வருகிறார்.
தாகூர் ஏமாற்றம்:
அந்த வாய்ப்பில் மும்பை அணிக்காக இதுவரை 402* ரன்கள் எடுத்துள்ள அவர் 33* விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். அதிலும் ஹரியானாவுக்கு எதிரான காலிறுதியில் 9 விக்கெட்டுகள் சாய்த்த அவர் மும்பை செமி ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் அடுத்ததாக கவுண்டி தொடரில் விளையாடி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று தாக்கூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி தாகூர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது இயற்கையாக ஏமாற்றத்தைக் கொடுக்கும். நீங்கள் விளையாடாமல் வீட்டில் அமர்ந்திருக்கும் போது அது இன்னும் சிந்தனைகளைக் கொடுக்கும். ஆனால் ஐபிஎல், ரஞ்சி, இந்தியா உட்பட எங்கே விளையாடினாலும் களத்திற்கு சென்று விட்டால் என்னுடைய மொத்த கவனமும் ஆட்டத்தில் தான் இருக்கும்”
நெருப்பு அணையாது:
“என்னைப் பொறுத்த வரை அனைத்துப் போட்டிகளும் ஒன்று தான். எந்தப் போட்டியில் விளையாடினாலும் மற்றதை சிந்திக்காமல் எனது சிறந்தவற்றைக் கொடுக்க முயற்சிக்கிறேன். இப்போதும் இந்திய அணியில் விளையாட முடியும் என்ற நம்பிக்கையுடன் அதற்காக உழைத்து வருகிறேன். அது தான் எப்போதும் பெரிய இலக்கு. தற்போது ரஞ்சியில் விளையாடும் நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் பசியுடன் இருக்கிறேன்”
இதையும் படிங்க: 9 விக்கெட்ஸ்.. செமி ஃபைனலில் மும்பைக்காக மேஜிக் நிகழ்த்திய லார்ட் தாகூர்.. இங்கிலாந்தில் செயலால் வாய்ப்பு கேட்பு
“நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற நெருப்பு எப்போதும் அணையாது. கவுண்டி தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன். தற்போது எந்த திட்டமும் இல்லை. ஆனால் அந்த நேரத்தில் 6 – 7 கவுண்டி போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் தேர்வு செய்யப்பட்டால் இங்கிலாந்து தொடருக்கு முன் அங்குள்ள சூழ்நிலைகளுக்கு என்னை உட்படுத்திக் கொள்ள உதவும்” எனக் கூறினார்.



