
இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
அதற்கடுத்து தற்போது 2025-27 ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை என்பதனால் இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.
அதேவேளையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய அனுபவ வீரர்கள் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஓய்வை அறிவித்துள்ளதால் இந்த தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்படப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியில் அதிகரித்துள்ளது.
அதே வேளையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான அணியின் கேப்டன் யார்? மற்றும் இந்த தொடரில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்ற பல கேள்விகள் விடை தெரியாமல் இருக்கின்றன. இவ்வேளையில் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷர்துல் தாகூர் மீண்டும் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இணையம் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
ஏனெனில் அண்மை காலமாகவே உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் ரகானே தலைமையிலான மும்பை அணியில் ரஞ்சி தொடரின் போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி பந்துவீச்சில் 35 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதம் என 505 ரன்கள் குவித்துள்ளதால் அவர் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : இந்திய அணியை நம்பர் ஒன்னாக மாற்ற.. 2015இல் கிங் கோலி 2 விஷயத்தை மாத்துனாரு.. புஜாரா பேட்டி
இந்திய அணிக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஷர்துல் தாகூர் 2023 வரை 11 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.