ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கியுள்ளது. ஆனால் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்விகளை பதிவு செய்துள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் தடுமாறி வருகிறது. குறிப்பாக விராட் கோலி போன்ற வீரர்களால் அந்த அணி பேட்டிங்கில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து வருகிறது.
ஆனால் பேட்ஸ்மேன்கள் போராடி அடிக்கும் ரன்களை பந்து வீச்சில் அப்படியே வள்ளலாக மாறி வழங்கும் ஆர்சிபி பவுலர்கள் வெற்றியையும் தாரை பார்த்து வருகின்றனர். அவருக்கு எடுத்துக்காட்டாக கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த போட்டியில் பேட்டிங்கில் பெங்களூரு அணி போராடி 182 ரன்கள் எடுத்தது. ஆனால் அதே ரன்களை பந்து வீச்சில் மோசமாக செயல்பட்ட பெங்களூரு பவுலர்கள் வெறும் 16.5 ஓவரில் வாரி வழங்கி தோல்விக்கு காரணமாக அமைந்தனர்.
வாட்சன் அதிருப்தி:
அதனால் இந்த பவுலிங்கை வைத்துக்கொண்டு எப்போதும் ஆர்சிபி கோப்பையை வெல்லாது என்ற விமர்சனங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் யுஸ்வேந்திர சஹால் போன்ற தரமான பவுலரை பெங்களூரு அணியினர் கழற்றி விட்டதை இப்போதும் தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் பெங்களூரு அணியில் கழற்றி விடப்பட்ட சஹால் தற்போது ராஜஸ்தான் அணியில் முதன்மை வீரராக வெற்றியில் பங்காற்றுவதாகவும் வாட்சன் பாராட்டியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் வாட்சன் பேசியது பின்வருமாறு. “யுஸ்வேந்திர சஹால் சர்வதேச அளவிலும் ஐபிஎல் தொடரிலும் நீண்ட காலமாக அசத்தி வருகிறார். சஹால் அதிக ரன்களை கொடுக்க மாட்டார். அதே சமயம் சிறந்த பேட்ஸ்மேன்களை அவுட்டாக்குவார்”
“அதை தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு போட்டிக்குப் பின்பும் செய்து வரும் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றுள்ளதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். மும்பைக்கு எதிரான போட்டியில் அவர் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை எடுத்தது தான் வெற்றியின் திருப்பு முனையாக அமைந்தது. அந்த வகையில் மீண்டும் சஹால் உயரே செயல்பட்டார். ஆனால் அப்படிப்பட்ட அவரை ஆர்சிபி ஏன் வெளியே விட்டார்கள்? என்பதைப் பற்றி நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: எவ்ளோ ரேட் இருந்தாலும் என்னை வாங்குறேன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க – யுஸ்வேந்திர சாஹல் வருத்தம்
அவர் கூறுவது போல ஆர்சிபி அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் 2022 சீசனில் 27 விக்கெட்டுகள் எடுத்த சஹால் ஊதா தொப்பியை வென்று சாதனை படைத்தார். மேலும் கடந்த வருடம் 21 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய அவர் இந்த வருடம் இதுவரை 3 போட்டிகளில் 6* விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மறுபுறம் அவரை கழற்றி விட்ட ஆர்சிபி தற்போது தரமான ஸ்பின்னர் இல்லாமல் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.