இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் சுமாராக விளையாடி வருகிறார்கள். அதனால் அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் அவர்களுடைய சுமாரான ஆட்டத்தால் 2014க்குப்பின் முதல் முறையாக பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா நழுவ விட்டுள்ளது.
மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு முதல் முறையாக இந்தியா தகுதி பெறும் வாய்ப்பு கிட்டத்தட்ட இழந்துள்ளது. மறுபுறம் ஜெய்ஸ்வால், நித்திஷ் ரெட்டி போன்ற இளம் வீரர்கள் அவர்களை விட சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதனால் இது வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு அவர்கள் ஓய்வு பெற வேண்டிய நேரம் என்று ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
வாட்சன் ஆதரவு:
இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் தடுமாறினாலும் அடுத்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி, ரோஹித் சர்மா அசத்துவார்கள் என்று ஷேன் வாட்சன் ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்கான காரணங்கள் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி, ரோஹித் சர்மாவின் தற்போதைய ஃபார்ம் ஒருநாள் கிரிக்கெட்டில் எதிரொலிக்கும் என்று நான் நினைக்கவில்லை”
“துபாயில் அவர்கள் விளையாடும் போது சூழ்நிலைகள் வித்தியாசமாக இருக்கும். ஒருநாள் போட்டிகள் அவர்கள் இருவரையும் சுதந்திரமாக விளையாட வைக்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி மாஸ்டர் ஆவார். மூன்று வகையான கிரிக்கெட்டிலுமே அவர் மாஸ்டர் தான். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக அவர் 93 ஸ்ட்ரைக் ரேட்டில் 57 என்ற சராசரியை கொண்டுள்ளார்”
சாம்பியன்ஸ் ட்ராபி:
“அதை நீண்ட காலமாக கட்டுப்படுத்துவது வேடிக்கையான விஷயம் என்று நினைக்கிறேன். அதை மீண்டும் நீங்கள் சாம்பியன்ஸ் டிராபியில் பார்க்கக்கூடும். 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடியதை மீண்டும் நாம் அந்தத் தொடரில் பார்க்க முடியும். அவர் தன்னுடைய சிறந்த ஆட்டத்தில் இருக்கும் போது எதிரணியிடம் இருந்து போட்டியை எடுத்துக் கொள்வார்”
இதையும் படிங்க: வக்கார் யூனிஸ் 34 வருட சாதனையை உடைத்த பும்ரா.. 2024ஆம் ஆண்டின் நாயகனாக உலக சாதனை
“அதை டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்வது மிகவும் கடினம். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் ரோஹித் சர்மாவால் சமநிலையை கண்டறிய முடியவில்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அதை விட மாட்டார். எனவே சாம்பியன்ஸ் கோப்பையில் அவர் அசத்தாவிட்டால் அது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது. எனவே அவர் நன்றாக விடை பெறுவார் என்று உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறினார்.



