டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடப்போகும் அணிகள் இவைகள் தான் – இந்தியாவின் வாய்ப்பு பற்றி ஆஸி ஜாம்பவான் கணிப்பு

WTC
- Advertisement -

நூற்றாண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் பெரும்பாலும் 5 நாட்கள் கடந்தும் டிராவில் முடிவடைந்ததால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டை பெரும்பாலான ரசிகர்கள் விரும்ப துவங்கினார்கள். அதனால் அழிவின் பிடியில் சிக்கிய கிரிக்கெட்டின் இதயமான டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்பிக்க 20 மற்றும் 50 ஓவர்களை போல டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் புதிய உலகக்கோப்பையை ஐசிசி அறிமுகப்படுத்தியது. அதனால் தரவரிசையில் முதலிடம் பிடித்தால் கோப்பை கிடையாது லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டியில் வென்றால் தான் கோப்பை என்ற நிலைமை உருவானதால் எப்படியாவது வென்றே தீரவேண்டும் என்ற மனப்பான்மை அனைத்து அணிகளிடமும் உருவாகி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது.

கடந்த 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கோப்பையின் முதல் தொடரில் லீக் சுற்றில் அசத்திய விராட் கோலி தலைமையிலான இந்தியாவை இறுதிப்போட்டியில் தோற்கடித்த நியூசிலாந்து வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்தது. அந்த நிலைமையில் 2021 – 2023 வரை நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப் போட்டி வரும் 2023 ஆகஸ்ட் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அந்த மாபெரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்காக உலகின் அனைத்து அணிகளும் தற்போது நடைபெற்று வரும் லீக் சுற்றில் கடும் போட்டி போட்டு வருகின்றன.

- Advertisement -

தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா:
இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் 8 போட்டிகளில் பங்கேற்ற தென்னாப்பிரிக்கா 6 வெற்றிகளுடன் 75% புள்ளிகளுடன் முதல் இடத்திலும் 10 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா 70% புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது. தற்போதைய நிலைமையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1 – 0* (3) என முன்னிலை வகிக்கும் தென்னாப்பிரிக்கா இத்தொடரை வென்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற பிரகாச வாய்ப்புள்ளது. மறுபுறம் வரும் ஜனவரியில் சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து பிப்ரவரியில் இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட தொடரில் வென்றால் ஆஸ்திரேலியா ஃபைனலுக்கு செல்ல நல்ல வாய்ப்புள்ளது.

ஆனால் கடந்த முறை பைனலில் சொதப்பி கோப்பையை கோட்டை விட்ட இந்தியா இம்முறை இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று 52.08% புள்ளிகளுடன் 4-வது இடத்தில் தவிக்கிறது. தற்போதைய நிலைமையில் வரும் நவம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறும் 2 போட்டிகளிலும் வரும் பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 4 போட்டிகளிலும் தோற்காமல் ட்ராவும் செய்யாமல் 6 போட்டிகளையும் வென்றால் மட்டுமே இந்தியா பைனலுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

வாட்சன் கணிப்பு:
இந்நிலையில் பைனலுக்கு இன்னும் 10 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் தற்போது முதல் 2 இடங்களில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். அதேப்போல் கடைசி நேரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “தற்போதைய நிலையில் தென் ஆப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு செல்லாது என்று கூறுவது கடினமான ஒன்றாகும். அவர்கள் இருவருமே சிறந்த கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இலங்கைக்கு எதிரான கடைசி தொடரில் சுழலில் தடுமாறியதை தவிர்த்து ஆஸ்திரேலியா நல்ல அளவில் விளையாடி வருகிறது”

“தற்போது முன்னணியில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா ஒருவேளை தீவிரமான சரிவை சந்தித்தால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் புள்ளிப் பட்டியலில் மேல் நோக்கி வருவதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் நீங்கள் எப்போதும் இந்தியா மற்றும் பாகிஸ்தானை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களிடம் வெளிநாட்டிலும் சிறந்து செயல்படும் நிறைய மேட்ச் வின்னர்கள் உள்ளனர். ஒருவேளை அவர்கள் அது போன்ற கடுமையான போட்டி போட்டு இறுதி போட்டிக்கு தகுதி பெற முயற்சிக்கவில்லை என்றால் அது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்” என்று கூறினார்.

இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய சிஸ்டம் தங்களுடைய காலத்தில் இல்லாமல் போனது தங்களுடைய துரதிர்ஷ்டம் என தெரிவிக்கும் ஷேன் வாட்சன் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட விரும்புவதாக தெரிவித்து மேலும் பேசியது வருமாறு.

“டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட நான் மிகவும் விரும்புகிறேன். எங்களுடைய காலத்திலும் இதை நடத்துவதற்கான பேச்சுக்கள் இருந்தன. ஆனால் அது வருவதற்குள் நாங்கள் ஓய்வு பெற்று விட்டோம். இருப்பினும் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இருப்பது உலக அளவில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு வரப்பிரசாதமாகும்” என்று கூறினார்.

Advertisement