ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக நடைபெற்ற அடுத்தடுத்த 2 டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களை இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது. அந்த வரிசையில் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் மீண்டும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடரிலும் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றி பெற இந்தியா தயாராகி வருகிறது.
ஆனால் இம்முறை இந்திய அணியை தோற்கடித்து ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். அதே போல ரிஷப் பண்ட் முக்கிய வீரர்களை அமைதியாக வைத்திருந்து இந்தியாவை வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக கேப்டன் பட் கமின்ஸ், நேதன் லயன் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் கூறியிருந்தனர்.
இந்தியாவிடம் நெருப்பு இருக்கு:
இந்நிலையில் ஆஸ்திரேலியாவை மீண்டும் அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்கும் அளவுக்கு இந்தியாவிடம் தரமான பேட்டிங், பவுலிங் இருப்பதாக முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். குறிப்பாக 2020 – 21 தொடரில் 36க்கு ஆல் அவுட்டான பின்பும் வென்றது இந்தியாவுக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும் என்று வாட்சன் தெரிவித்துள்ளார். எனவே ஆஸ்திரேலிய அணி கவனத்துடன் விளையாட வேண்டும் என்று வாட்சன் எச்சரித்துள்ளார்.
இது பற்றிய சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணி தான் கடந்த தொடரை வென்றது. மறுபடியும் அதை செய்வதற்கான நெருப்பு (ஃபயர்பவர்) அவர்களிடம் உள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 5 போட்டிகளில் அதை செய்வது கடினம். எனவே அவர்கள் சுழற்சி முறையில் பவுலர்களை பயன்படுத்தலாம்”
ஷேன் வாட்சன் கருத்து:
“அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் உலகின் அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் அசத்தக்கூடியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உலகின் மற்ற பகுதிகளை போல ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவு கிடைக்காது. எனவே அவர்கள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகும். அதே போல இந்தியாவிடம் நட்சத்திர மற்றும் திறமை கொண்ட பேட்ஸ்மேன்கள் உள்ளனர்”
இதையும் படிங்க: கில், ருதுராஜ் கிடையாது.. இந்த 2 இந்திய பசங்க தான் என்னை மாதிரி ஸ்டைலிஷா ஆடுறாங்க.. லாரா பாராட்டு
“அவர்களை ஒன்றிணைத்து ஆஸ்திரேலிய பவுலர்கள் மீது இந்தியா அழுத்தத்தை போடாது என்று சொல்ல எந்த காரணமும் இல்லை. எனவே ஆஸ்திரேலியாவில் பெரிய சவாலை கொடுப்பதற்கான ஃபயர்பவர் இந்தியாவிடம் உள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் அவர்கள் நன்றாக விளையாடினர். அது அவர்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும். எனவே ஆஸ்திரேலியா இந்தத் தொடரை வெல்வதற்கு தங்களுடைய மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று கூறினார்.



