இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை குவித்தது. துவக்க வீரர் ப்ரித்வி ஷா டக் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான அகர்வாலும் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற புஜாரா மற்றும் கோலி ஆகியோர் அணியை ஓரளவு நல்ல நிலைமைக்கு அழைத்துச் சென்றனர்.
அதிலும் புஜாரா 43 ரன்கள் எடுத்து வெளியேற பின்னர் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி சதத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக ரஹானே தவறாக அழைத்த ஒரு ரன்னை ஓடுவதற்காக முயற்சித்த கோலி மீண்டும் கிரீஸ் திரும்ப முடியாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இந்த நிகழ்வு ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி பெரிய சலசலப்பையும் ஏற்படுத்தியது.
நேற்றைய போட்டியில் நன்றாக சென்றுகொண்டிருந்த இந்திய அணிக்கு ஏற்பட்ட திருப்புமுனை அந்த இடம்தான். கோலி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது ஓரளவு பெரிய ரன்களை இந்திய அணி குவிக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் முக்கியமான கட்டத்தில் தேவையின்றி அவர் ஆட்டமிழந்ததால் இந்திய அணி அடுத்தது விக்கெட்டுகளை இழந்து தற்போது 244 ரன்களுக்கு முதல் இன்னிங்சை முடித்துள்ளது.
நேற்று 233 ரன்களுடன் முதல் நாள் ஆட்டத்தை முடித்த இந்திய அணி இன்று துவங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேலும் 11 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழுந்து 244 ரன்களில் இன்னிங்சை முடித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலியின் இந்த ரன் அவுட் குறித்த தனது கருத்தினை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்ன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது :
Disappointing to see the great @imVkohli get run out ! You could tell when he walked to the crease he wanted a big innings and was super determined ! Such a shame for us cricket lovers https://t.co/Fj4qPmsqOb
— Shane Warne (@ShaneWarne) December 17, 2020
விராட் கோலி மாதிரியான மகத்தான பேட்ஸ்மேன்கள் ரன் அவுட்டை பார்க்கும்போது ஏமாற்றத்தினால் மனம் வருத்தம் அடைகிறது. அவர் கிரீசுக்கு வரும்போது பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் என எல்லோரும் சொல்லலாம், அதை உறுதியோடு அவர் செய்து கொண்டிருக்கிறார். நம்மைப்போன்ற கிரிக்கெட் பிரியர்களுக்கு இது சற்று வருத்தமான விடயம் தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.