இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதற்கட்டமாக 4 போட்டிகள் கொண்டுடங்கிய டெஸ்ட் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகள் அஹமெதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை படுதோல்வி அடைய செய்தது.
இரண்டாவது போட்டியின் முதல் மூன்று நாள் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியாவின் கை சற்று ஓங்கியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் இரண்டாவது போட்டியில் ரன் குவிக்க முடியாததற்கு காரணம் ஆடுகளம்தான் என இந்தியாவை கடுமையாக ட்விட்டரில் விமர்சித்து இருந்தார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன். அதையடுத்து அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானான ஷேன் வார்ன்.
“முதல் போட்டியில் டாஸை வெல்வது அவசியமாக இருந்தது. ஏனென்றால் முதல் இரண்டு நாட்கள்அந்த ஆடுகளத்தில் ஒன்றுமே இல்லை. மூன்றாம் நாளிலிருந்துதான் ஆடுகளம் அதன் வேலையை காட்ட தொடங்கியது. ஆனால் இரண்டாவது போட்டியில் அப்படி இல்லை. முதல் பந்து வீசியதில் இருந்தே பந்து நன்றாக சுழல்கிறது. இங்கிலாந்து இந்தியாவை 220 ரன்களுக்குள் சுருக்கி இருக்க வேண்டும்.
The toss was more important to win in the 1st test than this one, as it did nothing the 1st 2 days. Then exploded. This one has been a turner from ball one. Eng should’ve bowled India out for 220. No different between spinning or seaming & Rohit showed how to play on this surface https://t.co/xg1gPDetRs
— Shane Warne (@ShaneWarne) February 14, 2021
ஸ்பின்னுக்கும், ஸ்விங்கிற்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்யாசமில்லை. மேலும் அந்த ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டுமென தனது அபாரமான இன்னிங்ஸால் இங்கிலாந்திற்கு ரோகித் சர்மா தக்க பாடம் எடுத்துள்ளார்” என வார்ன் மைக்கேல் வாகனின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து பதிவிட்டுள்ளார்.
வாரன் ரீ-ட்வீட் செய்த டீவிட்டிற்கு கீழ் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் வாகனை கிண்டலடித்து வருகின்றனர். மேலும் பேட்டிங்கிற்கு சாதகமில்லை என்று கூறப்பட்ட இந்த மைதானத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினும் சதமடித்து அசத்தியுள்ளார்.