இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த ஆஸ்திரேலிய தொடரில் காயத்தை சந்தித்தார். அதன் காரணமாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாடாத அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இருப்பினும் விரைவில் குணமடைந்து அவர் மும்பை அணிக்காக ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே இங்கிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பும்ரா விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மற்ற பவுலர்கள் சுமாராக செய்தனர். அதனால் தனி ஒருவனாக முழுமூச்சுடன் பவுலிங் செய்து வெற்றிக்குப் போராடிய பும்ரா கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்தார். குறிப்பாக மெல்போர்ன் போட்டியில் 53.2 ஓவர்களை போட்டது அதிகப்படியான பனிச்சுமையை உண்டாக்கி பும்ராவின் முதுகை உடைத்து காயத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
பாண்ட் எச்சரிக்கை:
இந்நிலையில் அதே போல அடுத்த இங்கிலாந்து தொடரிலும் பும்ராவை பயன்படுத்தினால் அவருடைய கேரியர் முடியலாம் என்று இந்தியாவின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை முன்னாள் நியூசிலாந்து வீரர் ஷேன் பாண்ட் எச்சரித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய தொடரில் பும்ராவுக்கு கை கொடுக்கும் அளவுக்கு சிறந்த பவுலர்களை இந்தியா தேர்ந்தெடுக்கவில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
எனவே சரியான பவுலிங் கூட்டணியை தேர்ந்தெடுக்காமல் உம்ராவை வருத்துவது சரியில்லை என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “2023இல் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பும்ரா ஆஸ்திரேலியாவில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடி நம்ப முடியாத வகையில் அசத்தினார். ஆனால் நாளின் இறுதியில் அவர் ஒரு மாதத்திற்குள் வீச வேண்டியதை விட அதிகப் பந்துகளை வீசினார்”
முக்கியமான பும்ரா:
“அது அவரை உடைத்து காயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் பாடத்தை கற்றுள்ள இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் இதே விஷயத்தை செய்தால் மீண்டும் அதே முடிவு கிடைக்கும். அதனால் அதை நீங்கள் செய்யக்கூடாது. பும்ராவை அதிகமாக வருத்தாமல் வெற்றி பெறுவதற்கு தகுந்த பவுலர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்”
இதையும் படிங்க: கேப்டனாக செயல்பட்ட கடைசி போட்டியில் தண்டனை பெற்ற ரியான் பராக்.. 12 லட்சம் காலி – என்ன நடந்தது?
“அதைச் செய்யாமல் பும்ராவை நீங்கள் இழந்தால் 2026 டி20 உலகக் கோப்பை, 2027 உலகக் கோப்பை ஆகியவற்றையும் இழக்கக்கூடும். ஏனெனில் அவர் அனைத்து வகையான ஃபார்மட்டிலும் முக்கியமான பவுலர். தற்போதைய காயம் உங்களுக்கு பாடமாகும். நீங்கள் அவரை மீண்டும் ஒரு போட்டியில் அவ்வளவு ஓவர்கள் வீச வைக்கக்கூடாது. அதிகபட்சமாக 45 ஓவர்கள் வீசலாம். பும்ரா தன்னை பாதுகாக்க தேவையான விஷயங்களை செய்கிறார். நீங்களும் அவரைப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார்.



