இந்திய அணி 2013 ஆம் ஆண்டில் ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் அட்டகாசமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருந்தது. அதன் பின்னர் இந்திய அணிக்கு தேர்வானவர் தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இந்திய அணிக்கு நான்காவது வேகப்பந்து வீச்சாளராக நுழைந்த ஷமி தனது அசத்தலான வேகமும் மற்றும் சிறப்பான பவுலிங் மூலம் தனது இடத்தை இந்திய அணியில் நிலைநிறுத்திக் கொண்டார். தற்போது வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார் ஷமி.

இந்நிலையில் தனது கிரிக்கெட் அனுபவத்தில் தோனியுடன் ஏற்பட்ட ஒரு சுவாரசியமான விடயத்தை தற்போது பகிர்ந்துள்ளார். அதன்படி தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் எந்த வித விளையாட்டுப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெற தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் துவங்க இருந்த ஐபிஎல் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே வீட்டில் ஓய்வில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளம் மூலமாக தங்களது ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். மேலும் சிலர் இன்ஸ்டாகிராம் வழியாக சக கிரிக்கெட் வீரர்களுடன் நேரலையில் உரையாடி தங்களது கிரிக்கெட் குறித்த அனுபவங்கள் மற்றும் தங்களால் மறக்கமுடியாத தருணங்கள் குறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரரான மனோஜ் திவாரி உடன் இன்ஸ்டாகிராமில் பேசிய ஷமி தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தோனி குறித்து பேசிய ஷமி : 2014 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டில் டெஸ்ட் போட்டியில் விளையாடினோம். அந்தப் போட்டியில் மெக்கல்லம் மிக சிறப்பாக விளையாடினார் நான் பவுலிங் செய்து கொண்டிருந்தபோது மெக்கல்லம் கொடுத்த எளிதான கேட்சை கோலி கோட்டை விட்டுவிட்டார். இதனால் நான் மிகவும் கடுப்பாகி விட்டேன். மேலும் தொடர்ந்து விளையாடிய மெக்கல்லம் 300 ரன்களை குவிக்க நியூசிலாந்து அணி வலுவான நிலையை அடைந்தது.
அப்போதே அந்த கேட்சை பிடித்திருந்தால் 14 ரன்களில் அவர் அவுட் ஆகியிருப்பார் இதனைத்தொடர்ந்து பேசிய ஷமி : மெக்கல்லம் 300க்கு மேல் அடித்ததால் நான் அவரின் மீது கடுப்பாகி அவரை அவுட் ஆக்குவதற்காக வேண்டுமென்றே சில பவுன்சர்களை வீசினேன். ஆனால் அது விக்கெட் கீப்பர் தோனியின் தலைக்கு மேல் சென்று பவுண்டரிக்கு சென்றது. அதனை தொடர்ந்து இன்னொரு பந்தும் அப்படியே சென்றதால் தோனி என்மீது கடுப்பானார்.

இதனைத் தொடர்ந்து ஆட்ட நேர முடிவில் பெவிலியன் திரும்பிக் கொண்டிருக்கும்போது ஏன் அப்படி பந்து வீசினீர்கள் என்று தோனி என்னிடம் வந்து கேட்டார். நான் அதற்கு பந்து என் கையிலிருந்து நழுவி விட்டது என்று கூறினேன். ஆனால் அதற்கு தோனி என்னிடம் நான் நிறைய வீரர்களைப் பார்த்து இருக்கிறேன். என்னிடம் பொய் சொல்ல வேண்டாம் நான் உன்னையை கேப்டன் என்னை முட்டாளாக்க வேண்டாம் என்று கூறினார். என்று தோனியுடன் ஏற்பட்ட நிகழ்வினை குறித்து ஷமி பேசினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத கேப்டனாக வலம் வந்த தோனி வீரர்களின் உணர்வுகளை களத்தில் அறியும் தன்மை கொண்டவர் என்பதனை நாம் பலமுறை பார்த்துள்ளோம் அதுமட்டுமின்றி பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ப களத்தில் வியூகம் வகுத்து விக்கெட்டுகளை எடுத்துள்ளதையும் நாம் பார்த்துள்ளோம். அதன்படி எந்த ஒரு கிரிக்கெட் வீரரின் மனநிலையையும் தோனி புரிந்து கொள்ளும் தன்மை உடையவர்.

இந்நிலையில் தற்போது ஷமி அளித்துள்ள இந்த பேட்டியின் மூலம் அவருக்கும் தோனி அவரது பந்து வீச்சை மேம்படுத்த சில அறிவுரைகள் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. தோனி கேப்டன் ஆனதில் இருந்து தற்போது வரை ஸ்டம்பிற்கு பின்னால் நின்று பல பவுலர்களின் திறனை மாற்றி உள்ளார் என்பதும் நாம் அறிந்ததே. ஷமியின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



