பாகிஸ்தான் நாட்டில் எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த தொடர் குறித்த பல்வேறு செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வீரர்கள் :
இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி குரூப் ஏ பிரிவில் : இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் : ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
குரூப் பிரிவில் இடம் பிடித்துள்ள அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அனைத்து அணிகளும் தங்களது அணிகளை வரும் 12-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை அணியில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள வேளையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீண்டும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : உருக்கமான பதிவுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மார்ட்டின் கப்தில் – விவரம் இதோ
அதோடு அவருடன் சேர்த்து சமீப காலமாகவே இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவும் அணிக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக பும்ராவும் செயல்பட உள்ளதாகவும் இந்த அணி 12-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.



