- Advertisement -
உலக கிரிக்கெட்

விராட் கோலி மாதிரி வருவாருன்னு எதிர்பாத்தேன்.. ஆனா பாபர் அசாம் அங்க மட்டும் ஏமாத்துறாரு.. அப்ரிடி வருத்தம்

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. இந்த வருடம் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் முதல் போட்டியிலேயே சூப்பர் ஓவரில் சொதப்பிய அந்த அணி அவமானத் தோல்வியை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து பரம எதிரி இந்தியாவிடம் 120 ரன்கள் அடிக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது.

அதனால் கடைசி லீக் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. முன்னதாக இந்த உலகக் கோப்பையில் கேப்டன் பாபர் அசாம் 3 போட்டிகளில் 91 ரன்களை 104.65 என்ற மோசமான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தது பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

அப்ரிடி வருத்தம்:
இந்நிலையில் இந்தியாவின் விராட் கோலியை போல பாபர் அசாம் மேட்ச் வின்னராக வருவார் என்று எதிர்பார்த்ததாக முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். ஆனால் இருதரப்பு தொடர்களில் அசத்தும் பாபர் அசாம் ஐசிசி தொடர்களில் சொதப்புவதாக அப்ரிடி ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டை விரும்புபவர்கள் சமூகவலைதளங்களில் பாபர் அசாம் கேப்டன்ஷிப் பற்றி விமர்சிக்கின்றனர்”

“ஆனால் அவரைப் போல் தொடர்ச்சியாக அசத்தக்கூடிய வீரர் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது அரிதாகும். அவருடைய தனிப்பட்ட செயல்பாடுகள் நன்றாக இருக்கிறது. ஆனால் ஆம் உலகக் கோப்பைகளில் அவரால் அசத்த முடியவில்லை என்பது உண்மையாகும். விராட் கோலியை போல பாபர் அசாம் மேட்ச் வின்னராக வளர்வார் என்று நான் எப்போதும் விரும்பினேன்”

- Advertisement -

“இருப்பினும் முதல் நாளில் இருந்தே அவர் மேட்ச் வின்னராக செயல்படவில்லை. ஆனால் அவர் தன்னை முன்னேற்றியுள்ளார். பாபர் அசாம் கேப்டனாக இருப்பதால் விமர்சிக்கப்படுகிறார். அவரை நான் ரசிப்பவன். ஆனால் கடந்த 3 வருடங்களாக அவரிடம் கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்டது. அவருடைய தலைமையில் பாகிஸ்தான் திரும்பி பார்க்கும் அளவுக்கு வெற்றிகளையும் பெறவில்லை முன்னேற்றத்தையும் காணவில்லை. அது போன்ற சூழ்நிலையில் ஏன் தேர்வுக்குழு கமிட்டி அவரை மீண்டும் கேப்டனாக நியமித்தது”

இதையும் படிங்க: அதே தப்பை மறுபடியும் செய்யாதீங்க.. துபேவுக்கு பதில் அவரை கொண்டு வாங்க.. மைக்கேல் வாகன் அட்வைஸ்

“ஒரு வீரராக அவரை நாங்கள் எப்போதும் விமர்சித்ததில்லை. ஆனால் அவருடைய கேப்டன்ஷிப் சுமாராகவே உள்ளது. ஏனெனில் கேப்டனின் முடிவு தான் வெற்றியில் எதிரொலிக்கும். அவர் தன்னுடைய வீரர்களிடம் இணைந்து செயல்பட வேண்டும். இது போன்ற சில அம்சங்களில் பாபர் முன்னேற வேண்டும்” என்று கூறினார். அந்த வகையில் படுதோல்வியை சந்தித்ததால் பாபர் அசாம் மீண்டும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -