
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 2வது வெற்றியைப் பெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 127/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 64/5 என சரிந்த பாகிஸ்தான் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய சாகின் அப்ரிடி 33* (16) ரன்கள் விளாசி பாகிஸ்தானின் மானத்தை ஓரளவு காப்பாற்றினார். அடுத்து விளையாடிய இந்தியா 15.5 ஓவரில் இலக்கைத் தொட்டு எளிதாக வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு பேட்டிங்கில் அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 31, கேப்டன் சூரியகுமார் யாதவ் 47*, திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்கள். பந்து வீச்சில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 2, அக்சர் படேல் 2, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக அந்தப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சாய்ம் ஆயுப் முதல் பந்திலேயே பாண்டியாவுக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டானார்.
இந்நிலையில் அப்போட்டியில் சாய்ம் ஆயுப் பொறுப்புடன் பேட்டிங் செய்யாமல் தம்மைப் போல் சிக்ஸர் அடிக்க முயற்சித்து பாகிஸ்தானின் தோல்விக்கு வித்திட்டதாக முன்னாள் கேப்டன் சாஹித் அப்ரிடி விமர்சித்துள்ளார். இந்திய பவுலர்களை சமாளிக்கும் தரமான பேட்ஸ்மேன்கள் தற்போதைய பாகிஸ்தான் அணியில் இல்லை என்று விமர்சிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “போட்டிகளை வெல்வதற்கு பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க வேண்டும்”
“சாய்ம் ஆயுப் தன்னுடைய மனதைக் குளிர்ச்சியாக வைத்து விளையாட வேண்டும். மனதைப் பொறுமையாக வைத்திருங்கள் என்று அவரிடம் சொல்லுங்கள். நீங்கள் சூழ்நிலை மற்றும் பிட்ச் ஆகியவற்றைப் பார்த்து முதல் பந்தை விளையாட வேண்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் முதல் பந்திலிருந்தே சாகித் அப்ரிடியாக விளையாட முயற்சிக்கக் கூடாது. எதிரணியில் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் போதுமான ஓய்வெடுத்து வந்துள்ளர்”
இதையும் படிங்க: 15 ஓவர்லயே சேனல் மாத்திட்டேன்.. இந்தியாவை வீழ்த்தும் தரம் அவங்க யார்கிட்டயும் இல்ல.. கங்குலி ஓப்பன்டாக்
“நம்முடைய பாதி இதயத்தைக் கொண்ட பேட்டிங் துறை இந்தியாவுக்கு எதிராக வேலை செய்யாது. தற்சமயத்தில் நம்முடைய பாகிஸ்தான் அணியில் வெற்றியைக் கொண்டு வரக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் கூட இல்லை” என்று கூறினார். இதற்கிடையே அடுத்தடுத்த வெற்றிகளால் இந்தியா முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.