இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற தரமான பவுலர்களுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர். அதனால் ஆரம்பத்திலேயே கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளை சந்தித்த காரணத்தாலேயே நாளடைவில் உலகின் அத்தனை உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு 30000+ ரன்களையும் 100 சதங்களையும் விளாசி இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்து வரலாற்றில் காலம் கடந்தும் போற்றப்படும் தரமான ஜாம்பவனாக நிற்கிறார். அவர் விளையாடிய அத்தனை போட்டிகளிலும் இந்தியாவை தோற்கடிக்க வேண்டுமெனில் முதலில் சச்சினை அவுட்டாக்க வேண்டும் என்பதே எதிரணியின் இலக்காக இருக்கும்.
அதிலும் குறிப்பாக பரம எதிரியான பாகிஸ்தான் இந்தியாவை சாய்க்க முதலில் அதற்கு தடையாக நிற்கும் சச்சினை மண்ணைக் கவ்வ வைப்பதற்காக எந்த எல்லையையும் தொடுவதற்கு தயங்க மாட்டார்கள். குறிப்பாக சோயப் அக்தர் போன்ற பவுலர்கள் அவரைப் பார்த்தாலே வேண்டுமென்றே அதிகப்படியான வேகத்தில் மண்டையை உடைக்கும் பவுன்சர்களை வீசி அச்சுறுத்துவார்கள். ஆனால் அவர்களின் தாக்குதல்களுக்கு அசராமல் பெரும்பாலான போட்டிகளில் தனது அபார திறமையால் தக்க பதிலடி கொடுத்து பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்ட அவர் நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஸ்லெட்ஜிங்க்கு பதிலடி:
அப்படி பாகிஸ்தானுக்கு எதிராக எத்தனை போட்டிகளில் விளையாடியிருந்தாலும் கடந்த 2003 உலகக் கோப்பையில் சச்சின் விளையாடிய இன்னிங்ஸ் ரசிகர்களால் மறக்கவே முடியாதது. ஏனெனில் 274 ரன்களுக்கு துரத்தும் போது வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயப் அக்தர், சாகித் அப்ரிடிபோன்ற தரத்திலும் தரமான பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்ட அவர் சதத்தை தவற விட்டாலும் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 98 (75) ரன்களை 130.67 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து இந்தியாவை வெற்றிபெற வைத்தார்.
அதிலும் சோயப் அக்தர் வீசிய ஒரு பந்தை அசால்ட்டாக ஆஃப் சைடில் பறக்க விட்டு சிக்ஸர் இத்தனை வருடங்கள் கழித்தும் ரசிகர்களின் மனதில் நிற்கிறது. இந்நிலைமையில் அந்தப் போட்டியில் சாகித் அப்ரிடி உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் வேண்டுமென்றே சச்சினின் கவனத்தை சீர்குலைத்து வெற்றிபெற கடுமையான கெட்ட வார்த்தைகளால் திட்டியதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அதற்காக கொஞ்சமும் கவனம் சிதறாமல் சச்சின் தனது பேட்டால் பதிலடி கொடுத்தார் என்ற வரலாற்றுப் பின்னணியை பகிர்ந்துள்ளார்.
திட்டிய அப்ரிடி:
அந்த போட்டியில் சச்சினுடன் தொடக்க வீரராக களமிறங்கி 21 (14) ரன்களில் ஆட்டமிழந்த வீரேந்திர சேவாக் ஒரு கட்டத்தில் சச்சின் காயத்தால் அவதிப்பட்ட போது அப்போதைய விதிமுறைப்படி அவருக்காக ரன்னராக மீண்டும் அவருடன் விளையாடினார். அப்போது சாகித் அப்ரிடி போன்ற பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக திட்டியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அது மிகவும் முக்கியமான போட்டியென்று எங்களுக்கு தெரியும். ஆனால் மிகவும் அனுபவம் வாய்ந்த டெண்டுல்கர் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடியிருந்ததால் அதற்கு தயாராக வேண்டும் என்று அவருக்கு தெரிந்திருந்தது”
“என்னைப் பொறுத்தவரை அவருடைய உலகக்கோப்பை இன்னிங்சில் அதுதான் மிகச் சிறந்தது. அப்போட்டியில் அவர் காயத்தை சந்தித்தால் அவருக்காக நான் ரன்னராக களமிறங்கினேன். அப்போது பாகிஸ்தானின் சாகித் அப்படி தொடர்ச்சியாக சில வார்த்தைகளை உபயோகித்து திட்டிக் கொண்டே இருந்தார். ஆனாலும் தாம் களத்தில் இருப்பது முக்கியம் என்பதை உணர்ந்த சச்சின் கவனத்தை சிதறவிடாமல் விளையாடினார். பொதுவாக அவர் ரன்னர் எடுத்துக்கொள்ள மாட்டார். இருப்பினும் நான் அவருக்காக ரன்னராக வந்தால் எந்தக் குளறுபடிகளும் நடக்காது என்பதால் அவர் என்னை தேர்வு செய்தார்”
“ஐசிசி உலகக் கோப்பை உட்பட எந்த தொடராக இருந்தாலும் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிகள் எப்போதும் பரபரப்பாக இருக்கும். அதில் எப்போதும் இரு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் சண்டையிட்டுக் கொள்வதை பார்க்க முடியும். அந்த வகையில் அந்த உலகக் கோப்பைக்கு முன்பாக மிரட்டலாக பந்துவீசி இந்தியாவின் டாப் ஆர்டரை காலி செய்வேன் என்று பாகிஸ்தானின் சோயப் அக்தர் பேட்டி கொடுத்திருந்தார்”
“அந்த சமயத்தில் ஊடகங்களில் நாங்கள் விலகியிருந்ததால் அந்த செய்தியை படிக்கவில்லை. ஆனால் அந்த போட்டியில் சோயப் அக்தர் வீசிய முதல் ஓவரிலேயே 18 ரன்களை விளாசிய சச்சின் அவருக்கு தக்க பதிலடி கொடுத்தார்” என்று கூறினார். விரைவில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசிய கோப்பையில் மோத உள்ளதால் அப்போட்டியும் இதே போல் பரபரப்புடன் இருக்கும் என்று வீரேந்திர சேவாக் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கூறினார்.



