100 மேட்ச் விளையாடினால் அழிக்க முடியாத சாதனை செய்து விடுவார் – ஜாம்பவானின் பாராட்டை அள்ளிய ரிஷப் பண்ட்

Pant
Advertisement

இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் என்றால் சுமாரான பேட்டிங் செய்து பந்து பிடித்து போடுபவர்களாக இருந்த வந்த நிலையில் எம்எஸ் தோனி வந்தபின் அந்த நிலைமை தலைகீழாக மாறியது. ஏனெனில் அதிரடியாக பேட்டிங் செய்து வெற்றிகளை தேடிக் கொடுத்த அவர் விக்கெட் கீப்பர்கள் என்றால் அதிரடியாகவும் பேட்டிங் செய்தே தீரவேண்டும் என்ற இலக்கணத்தை ஏற்படுத்தினார். அப்படிப்பட்ட அவர் சமீபத்தில் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பின் அவரைப் போல அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடியவர் கிடைப்பாரா என்று எதிர்பார்த்த இந்திய ரசிகர்களின் ஏக்கத்தை ஈடு செய்யும் வகையில் வந்தவர்தான் ரிஷப் பண்ட்.

Pant

டெல்லியை சேர்ந்த இவர் 2016 ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையில் அசத்தியதன் காரணமாக 2017இல் இந்திய கிரிக்கெட்டில் முதல் முறையாக அறிமுகமாகி தோனியின் கடைசி காலங்களில் அவருடன் விளையாடினார். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக 3 வகையான கிரிக்கெட்டிலும் காலடி வைத்த அவர் ஆரம்பத்தில் சற்று சொதப்பி அதற்காக நிறைய விமர்சனங்களை சந்தித்தாலும் அதற்கு ஈடாக சாதனைகளையும் செய்து இன்று இந்தியாவின் முதன்மை விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ளார்.

- Advertisement -

டெஸ்டில் கில்லி:
ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என போன்ற வெள்ளை பந்து கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகளில் தான் எதிரணிகளை சொல்லி அடிக்கும் கில்லியாக அவர் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2020/21இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் காபாவில் நடந்த கடைசி போட்டியில் தில்லாக நின்று 89* ரன்கள் விளாசி ஆஸ்திரேலியாவை மீண்டும் அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து 2 – 1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்ல துருப்புச் சீட்டாக செயல்பட்டார்.

pant 2

மேலும் ஆசிய வீரர்களுக்கு சவாலான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள அவர் டெஸ்ட் போட்டிகளில் தோனியையும் மிஞ்சியுள்ளார் என்பதே நிதர்சனம். சமீபத்திய இலங்கை டெஸ்ட் தொடரில் கூட 28 பந்துகளில் சதமடித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற கபில்தேவ் சாதனையை உடைத்த அவர் இந்த 24 வயதிலேயே நிறைய சாதனைகளை படைத்து வருகிறார்.

- Advertisement -

100 மேட்ச்:
இந்நிலையில் ரிஷப் பண்ட் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி சாதனைப் புத்தகத்தில் யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்ட சாதனைகளைப் படைப்பார் என்று முன்னாள் இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை அவர் (பண்ட்) 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் காலத்திற்கும் சாதனை புத்தகத்தில் அவரின் பெயர் இடம் பெறும். இதுவரை 11 இந்தியர்கள் மட்டுமே அந்த சாதனையை படைத்துள்ளனர். அந்த 11 வீரர்களின் பெயர்கள் அனைவருமே அறிவோம்”

Sehwag

“என்னை கேட்டால் டெஸ்ட் போட்டிகள் தான் மிகச்சிறந்த கிரிக்கெட். எதற்காக விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் விளையாட மிகவும் ஆவலுடன் உள்ளார்? ஏனெனில் 100 – 150 போட்டிகளில் விளையாடினால் சாதனைப் புத்தகத்தில் அழிக்கமுடியாத பெயரைப் பெறலாம் என்று அவருக்கு தெரியும்” என்று பேசினார். என்னதான் ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் வந்தாலும் நாட்டுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது உண்மையான சாதனை என்று கூறும் சேவாக் இப்போது 30 போட்டிகள் மட்டுமே விளையாடி பல சாதனைகளை படைத்துள்ள ரிஷப் பண்ட் 100 போட்டிகளில் விளையாடினால் அடுத்த தலைமுறை வீரர்களால் உடைக்க முடியாத அளவுக்கு சாதனை படைப்பார் என்று பாராட்டினார்.

- Advertisement -

டெஸ்டில் சரவெடி:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அதிரடி எனும் வார்த்தையை அறிமுகப்படுத்திய வீரேந்திர சேவாக் சச்சின், கவாஸ்கர் போன்ற இதர ஜாம்பவான்களை காட்டிலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார். ஐபிஎல் வராத காலத்திலேயே டெஸ்ட் போட்டிகளில் டி20 கிரிக்கெட் விளையாடி ரசிகர்களைத் விரும்பிப் பார்க்க வைத்தார். மேலும் சச்சின் போன்றவர்களால் கூட தொட முடியாத டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதம் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (319, 309) அடித்த ஒரே இந்திய பேட்ஸ்மேனாக இன்றும் சாதனை படைத்துள்ளார்.

Sehwag 1

அதேபோல் தொடக்க வீரராக களமிறங்கும் சேவாக் என்றால் போட்டியின் முதல் பந்திலேயே பவுண்டரி பறக்க விடக் கூடியவர் என்று அனைவரும் அறிவோம். குறிப்பாக 2011 உலக கோப்பையில் 5 போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். அது பற்றி கேட்டபோது சேவாக் தெரிவித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க : இந்த ஒரு விஷயத்துக்காக நான் தினேஷ் கார்த்திக்கை பாராட்டியே ஆகனும் – சோயிப் அக்தர் வெளிப்படை

“முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க நான் திட்டமிடுவேன் என்று சச்சின் உட்பட நிறைய பேர் என்னிடம் கூறியுள்ளார்கள். ஆனால் எப்போதும் திட்டமிட்டது கிடையாது. போட்டியின் முதல் பந்தை ஒரு பந்து வீச்சாளர் எப்போதும் சுமாரான அல்லது பயிற்சி எடுக்கும் (ட்ரைல்) பந்தாக வீசுவார் என்பதால் அதில் பவுண்டரியை பறக்க விடுவேன்” என்று கூறினார்.

Advertisement