இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஐந்தாம் நாளை எட்டியுள்ள இந்த போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 407 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிவரும் இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 96 ரன்களை குவித்து இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஐந்தாவது நாளில் இந்திய அணி 200 ரன்களைக் கூட தாண்டாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங் கிண்டல் செய்திருந்தார்.
மேலும் இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் : ஆஸ்திரேலிய அணியின் பலமான பவுலிங் கூட்டணி அசுர பலத்தை கொண்டுள்ளது. எனவே இந்திய வீரர்களை அவர்கள் எளிதாக கட்டுப்படுத்தும்வார்கள். மிகச் சுலபமாக இந்த போட்டியை வெல்வார்கள். எனக்கு தெரிந்து இந்த போட்டியில் இந்திய அணி 200 ரன்களை தாண்டுவதே கடினம்தான். அதுதான் நிஜமும் கூட என அவர் இந்திய அணியை கேலி செய்து இருந்தார்.
ஆனால் தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 301 ரன்கள் குவித்து அவர் சொன்னதைவிட 100 ரன்களை கடந்து விட்டது. இது தொடர்பாக ரிக்கி பாண்டிங்கை கிண்டல் செய்யும் வகையில் விரேந்திர சேவாக் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது ஐபிஎல் தொடரின்போது ரிக்கி பாண்டிங் ஒரு பேட்டி ஒன்றினை கொடுத்து கொண்டிருக்கையில் ரிஷப் பண்ட் அவருக்குப் பின்னாலிருந்து எட்டிப் பார்ப்பது போல இருக்கும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து கிண்டலடித்துள்ளார்.
https://t.co/Z8zqkzZGNe pic.twitter.com/hKPAa3FLoc
— Virender Sehwag (@virendersehwag) January 11, 2021
அதாவது 200 ரன்களை கூட தாண்டாது என்று ரிக்கி பாண்டிங் கூறிய கருத்தை பண்ட் முறியடித்து விட்டார். இதன்காரணமாக இந்த ஒரு போட்டோவை அவர் பகிர்ந்து ரிக்கி பாண்டிங் கிண்டல் செய்துள்ளார் வீரேந்திர சேவாக். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 300 ரன்களை கடக்க முக்கிய காரணமாக ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டம் பார்க்கப்படுகிறது. ஏனெனில் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்சில் பொதுவாக அனைவரும் பொறுமையாக விளையாடுவார்கள். ஆனால் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக அதிரடியாக விளையாடிய பண்ட் 118 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரி என 97 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.