இந்திய வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் கிட்டத்தட்ட இந்திய அணியில் நிரந்தர வேகப்பந்து வீச்சாளராக மாறி வருகிறார். அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று விட்டது. மூன்று போட்டிகளில் விளையாடி மொத்தம் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். முதல் ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டும், அதற்கு அடுத்த முதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டும், அதற்கு அடுத்த இரண்டாவது டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவில் கடந்த பல வருடங்களாக இல்லை என்ற ஏக்கத்தை தீர்த்து வைத்து விட்டார் தங்கராசு நடராஜன்.
இதன் காரணமாக இவர் இந்திய அணியின் சொத்து என்று பாராட்டி விட்டார் விராட் கோலி. மேலும் இவரைப் போன்று யார்க்கர் பந்துகளை வீச தற்போது இந்தியாவில் யாரும் இல்லை எனவும் பலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் நடராஜன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இருவரும் அறிமுகமான போட்டிகளில் செய்த சில ஒற்றுமைகளை பட்டியலிட்டிருக்கிறார். அந்த புள்ளிவிபரம் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
அதில் இருவருமே இந்திய அணியில் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்ட போது காயம் அடைந்த வீரர்களுக்கு மாற்று வீரர்களாக இடம் பிடித்தவர்கள். அதுமட்டுமின்றி இவர்கள் இருவருமே முதன்முதலாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் தான் அறிமுகமானார்கள்.
இருவருமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் தான் அறிமுகமானார்கள். நடராஜனும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் 2 போட்டிகளில் விளையாடாமல் கடைசி போட்டியில் தான் அறிமுகம் ஆனார். அதேபோன்று பும்ரா 2016 ஆம் ஆண்டு ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் தான் அறிமுகமாகி இருந்தார்.
இருவருமே அறிமுகமான முதல் ஒரு நாள் போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர். அதுமட்டுமின்றி இந்த இருவரும் அறிமுகமான போது இந்திய அணி அந்த டி20 தொடரில் வெற்றி பெற்றது. இருவரும் அறிமுகமான முதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் விரேந்திர சேவாக்.