டி20 உ.கோ 2022 : மற்றுமொரு அதிர்ச்சி, வெற்றிகரமான வெ.இண்டீஸ் சாய்ந்தது எப்படி – ஸ்காட்லாந்துக்கு குவியும் பாராட்டுக்கள்

Jason Holder WI vs SCotland
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் துவங்கியுள்ள 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக 16 அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. அதில் தற்போது முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் 4 அணிகளை தீர்மானிக்கும் முதல் சுற்று நடைபெற்று வருகிறது. அந்த சுற்றில் அக்டோபர் 17ஆம் தேதியன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு ஹோபார்ட் நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. அப்போட்டியில் 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் 2 கோப்பைகளை வென்று டி20 உலகக் கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணியாக திகழ்வதால் எளிதாக வெல்லும் அணியாக எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து 20 ஓவர்களில் போராடி 160/5 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஜார்ஜ் முன்சி கடைசி வரை அவுட்டாகாமல் 9 பவுண்டரியுடன் அதிகபட்சமாக 66* (53) ரன்கள் குவித்தார். அவருடன் ஜோன்ஸ் 20 (17) கேப்டன் பாரிங்டன் 16 (14) மெக்லோட் 23 (14) கிறிஸ் லீவ்ஸ் 16* (11) என இதர வீரர்களும் கணிசமான ரன்களை குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

மற்றுமொரு அதிர்ச்சி:
அதை தொடர்ந்து 161 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல் மேயர்ஸ் 20 (13) எவின் லெவிஸ் 14 (13) என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். அதனால் தடுமாறிய அந்த அணிக்கு பிரண்டன் கிங் 17 (15) கேப்டன் நிக்கோலஸ் பூரன் 5 (9) என 2 முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர். அதனால் 62/4 திண்டாடிய அந்த அணியை காப்பாற்ற வேண்டிய சமர் ப்ரூக்ஸ் 4 (9) ரன்களிலும் துணை கேப்டன் ரோவ்மன் போவல் 5 (6) ரன்களிலும் அவுட்டாகி கைவிட்ட நிலையில் நட்சத்திர வீரர் ஜேசன் ஹோல்டர் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 38 (33) ரன்களில் போராடி ஆட்டமிழந்தார்.

அத்துடன் கதையும் முடிந்தது போல அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் 18.3 ஓவரிலேயே 118 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் 42 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஒரு காலத்தில் காட்டடி வீரர்களுடன் 2 உலகக் கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக இருந்தாலும் சமீப காலங்களில் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் திண்டாடும் அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து தரவரிசையில் 7வது இடத்தில் தவிக்கிறது. அதனாலேயே ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட முதன்மை அணிகள் பங்கேற்கும் முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறாத அந்த அணி தகுதி சுற்றில் விளையாடுகிறது.

- Advertisement -

இருப்பினும் நிக்கோலஸ் பூரன், லெவிஸ் என இப்போதும் தரமான அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லாத அந்த அணி தரவரிசையில் 15ஆவது இடத்திலுள்ள ஸ்காட்லாந்திடம் இப்படி தோல்வியடைந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதனால் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக தன்னுடைய எஞ்சிய 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற பரிதாப நிலைக்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது.

மறுபுறம் வெற்றிகரமான வெஸ்ட் இண்டீஸ் அணியை முதலில் பேட்டிங்கில் தேவையான ரன்களை சேர்த்து பின்னர் பந்து வீச்சில் மடக்கிப் பிடித்த ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி கைதட்டி பாராட்டு வகையில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த அணிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக மார்க் வாட் 3 விக்கெட்டுகளும் வீல் மற்றும் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இந்த வெற்றிக்கு 66* ரன்கள் குவித்த முக்கிய பங்காற்றிய ஜார்ஜ் முன்சி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக நேற்று துவங்கிய இந்த உலக கோப்பையின் முதல் போட்டியிலேயே ஆசிய சாம்பியன் இலங்கையை அசால்டாக தோற்கடித்த நமீபியா இதே போல் அதிர்ச்சி வைத்தியம் அளித்து வரலாற்று வெற்றியை பெற்றது. அந்த வரிசையில் தற்போது வலுவான வெஸ்ட் இண்டீஸை அசால்டாக சாய்த்துள்ள ஸ்காட்லாந்தும் தங்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மொத்தத்தில் துவங்கிய முதலிரண்டு நாட்களிலேயே 2 எதிர்பாராத முடிவுகளை கொடுத்துள்ள இந்த உலகக் கோப்பை ரசிகர்களுக்கு மேலும் எதிர்பாராத திருப்பங்களை விருந்தளிக்க காத்திருக்கிறது என்றே கூறலாம்.

Advertisement