ரஞ்சியில் அடிமேல் அடி ! ஒருவழியாக இந்திய அணி வாய்ப்பை உறுதி செய்த இளம் வீரர் – ரசிகர்கள் மகிழும் முழுவிவரம் இதோ

Sarfaraz-khan-2
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை 2021/22 சீசனின் மாபெரும் இறுதி போட்டி கடந்த ஜூன் 22இல் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 41 சாம்பியன் பட்டங்களை வென்று வெற்றிகரமான ரஞ்சி அணியாக சாதனை படைத்துள்ள வலுவான மும்பையை மத்திய பிரதேசம் எதிர்கொள்கிறது. அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து தனது முதல் இன்னிங்சில் 374 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு கேப்டன் பிரிதிவி ஷா 47 ரன்கள் எடுத்து அவுட்டாக சுவேட் பார்க்கர் 18, அர்மன் ஜாபர் 26, ஹர்டிக் டாமோர் 24 என அடுத்து வந்த முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்கி ஏமாற்றமளித்தனர்.

இருப்பினும் நடுவரிசையில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திர இளம் வீரர் சர்பராஸ் கான் நிதானமாக பேட்டிங் செய்தார். ஆனால் அவருக்கு கை கொடுக்காமல் சாம்ஸ் முலானி 12, டானுஷ் கோடின் 15 என எதிர்ப்புறம் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்று கொண்டே இருந்தார்கள். ஆனாலும் பொறுப்புடனும் சிறப்பாகவும் பேட்டிங் செய்த சர்ப்ராஸ் கான் 13 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 134 ரன்களை விளாசி கடைசி பேட்ஸ்மேனாக ஆட்டமிழந்தார்.

- Advertisement -

கண்ணீரால் கேள்வி:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வரும் மத்திய பிரதேசம் 337/2 என்ற வலுவான நிலைமையில் விளையாடி வருகிறது. முன்னதாக இந்த போட்டியில் சதமடித்த சர்பராஸ் கான் இந்தியாவுக்காக விளையாட இன்னும் எவ்வளவு ரன்கள், எத்தனை சதங்கள் தான் அடிக்க வேண்டும் என்று அந்த சதத்தை கொண்டாடும் போது ஒரு சில நொடிகள் கண்ணீரை விடாமல் விட்டு உணர்ச்சி பொங்கும் முகத்துடன் தேர்வு குழுவினரிடம் கேள்வி எழுப்பினார்.

ஏனெனில் இந்த ரஞ்சி கோப்பையில் 275, 63, 48, 165 என லீக் சுற்றில் பெரிய ரன்களை வெளுத்த அவர் 153, 40, 59*, 134 என பைனல் உட்பட நாக் அவுட் சுற்றிலும் வெறித்தனமாக பேட்டிங் செய்து 2 அரை சதங்கள் 2 சதங்கள் 1 இரட்டை சதம் உட்பட மொத்தமாக வெறும் 6 போட்டியில் 937 ரன்களை 133.85 என்ற அபாரமான சராசரியில் மெஷின் போல எடுத்து இந்த வருட ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

மேலும் கடந்த ரஞ்சி கோப்பையிலும் வெறும் 6 போட்டியில் 928 ரன்களை 154.66 என்ற அற்புதமான சராசரியில் விளாசிய அவர் ரஞ்சி கோப்பை வரலாற்றில் 2 சீசன்களில் அதிக ரன்கள் எடுத்த 3-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை வாசிம் ஜாபர் மற்றும் ராஜ்குமார் ஆகியோருக்கு பின் படைத்தார். இப்படி ரன் மெசினாக ரன்களை எடுத்து வரும் போதிலும் அவரை தேர்வு குழுவினர் கண்டு கொள்ளாமலேயே இருப்பதால் வெறித்தனமாக பேட்டிங் செய்து வரும் அவர் நேற்றைய போட்டியில் சதமடித்து உணர்ச்சி பொங்க வாய்ப்பு கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்று தொடையை தட்டி கொண்டாடினார்.

அது பற்றி 2-வது நாள் போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணிக்கு தேர்வாவதற்காக நான் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். என்னுடைய கவனம் முழுவதும் ரன்கள் அடிப்பதில் மட்டுமே உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். இந்திய அணி வாய்ப்பு எனது பயணத்தில் எழுதப்பட்டிருந்தால் நிச்சயம் நடக்கும்” என்று மனம் தளராமல் கூறினார்.

- Advertisement -

ஒருவழியாக:
இந்நிலையில் இப்படி ரன்கள் மேல் ரன்கள் எடுத்து தேர்வு குழுவினரின் கதவை முரட்டுத்தனமாக தட்டி வரும் சர்பராஸ் கானுக்கு வரும் நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது வாய்ப்பு உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது பற்றி பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேசியது பின்வருமாறு.

“இனிமேல் அவரைப் பார்க்காமல் இருப்பது சாத்தியமற்றது. அவரின் செயல்பாடுகள் அவரின் திறமையாக பேசுவது தற்போதுள்ள இந்திய அணியினரில் பலருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா ஏ அணிக்கும் சிறப்பாக செயல்பட்ட அவர் நல்ல பீல்டராகவும் உள்ளார். அதனால் வங்கதேச டெஸ்ட் தொடரின்போது அவரை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் ரஞ்சி கோப்பை பைனலில் 2-வது நாள் முடிவில் வெறித்தனமாக சதமடித்த சர்பராஸ் கானிடம் அன்று மாலை பேசிய இந்திய தேர்வுக் குழுவில் இடம் வகிக்கும் முக்கிய உறுப்பினர் சுனில் ஜோஷி விரைவில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement