ஜாம்பவான் டான் ப்ராட்மேனை மிஞ்சிய இளம் இந்திய வீரரின் புதிய சாதனை – இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா

Ranji Trophy Sarfaraz Khan
- Advertisement -

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை 2021/22 சீசனின் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக மத்திய பிரதேசம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த வருடம் 2 பாகங்களாக நடைபெற்ற இந்த தொடரில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற லீக் சுற்றிலும் தற்போது நடைபெற்ற நாக்-அவுட் சுற்றிலும் அசத்திய மும்பை மற்றும் மத்திய பிரதேச அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதைத் தொடர்ந்து ஜூன் 22இல் புகழ்பெற்ற பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் 41 சாம்பியன் பட்டங்களை வென்று வெற்றிகரமான ரஞ்சி அணியாக திகழும் மும்பையை ஒரு கோப்பையை கூட வெல்லாத மத்திய பிரதேசம் எதிர்கொண்டது.

Ranji Trophy MP

- Advertisement -

அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்சில் 374 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிக பட்சமாக கேப்டன் பிரித்வி ஷா 47, ஜெய்ஸ்வால் 78 ரன்கள் எடுக்க மத்தியபிரதேசம் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கௌரவ் யாதவ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை துவக்கிய மத்திய பிரதேசம் அபாரமாக பேட்டிங் செய்து 536 என்ற பெரிய ரன்களை எடுத்தது.

மும்பை ஏமாற்றம்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக யாஷ் துபே 133, சுபம் சர்மா 116, ரஜத் படிடார் 122 என 3 பேட்ஸ்மேன்கள் அட்டகாசமாக பேட்டிங் செய்து சதமடித்து அசத்தினார்கள். மும்பை சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக சாம்ஸ் முலானி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 162 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் 2-வது இன்னிங்சில் பெரிய ரன்களை எடுக்க வேண்டிய மும்பையை அற்புதமாக பந்துவீசி மடக்கிய மத்திய பிரதேசம் 269 ரன்களுக்கு சுருட்டியது. அந்த அணிக்கு அதிக பட்சமாக சுவேட் பார்க்கர் 51 ரன்களும் சர்பராஸ் கான் 45 ரன்களும் எடுத்தனர். மத்தியபிரதேசம் சார்பில் அதிகபட்சமாக குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

Ranji Trophy Chandrakant Pandit And Aditya Srivastava

இறுதியில் 108 என்ற சுலபமான இலக்கை துரத்திய மத்திய பிரதேசத்துக்கு ஹிமான்சு மன்ட்ரி 37, சுபம் சர்மா 30, ரஜத் படிடார் 30* என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்கள் எடுத்ததால் 108/4 ரன்களை எடுத்த அந்த அணி வலுவான மும்பையை மண்ணை கவ்வ வைத்து முதல் கோப்பையை முத்தமிட்டு சரித்திரம் படைத்தது. இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய சுபம் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் பேட்டிங்கில் கோட்டைவிட்ட மும்பை 42-வது கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டு ஏமாற்றமடைந்தது.

- Advertisement -

அசத்திய சர்பராஸ்:
முன்னதாக இந்த வருட ரஞ்சி கோப்பையில் 275, 63, 48, 165, 153, 40, 59*, 134, 45 என லீக், நாக்-அவுட், பைனல் என்று அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து வெறும் 9 இன்னிங்சில் 982 ரன்களை 122.75 என்ற வெறித்தனமான சராசரியில் வெளுத்து வாங்கி அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து மும்பையின் வெற்றிக்காக போராடிய 24 வயது இளம் வீரர் சர்ப்ராஸ் கானின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இருப்பினும் போராட்டத்துக்கு பரிசாக இந்த வருட ரஞ்சி கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்று சர்பராஸ் கான் சாதனை படைத்தார்.

Sarfaraz-Khan

இது மட்டுமல்லாமல் கடந்த வருடம் ரஞ்சித் தொடரிலும் வெறும் 6 போட்டிகளில் 928 ரன்களை 154.67 என்ற அற்புதமான சராசரியில் குவித்த அவர் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார். அதன் வாயிலாக ரஞ்சி கோப்பை வரலாற்றில் 2 சீசன்களில் அதிக ரன்கள் எடுத்த 3-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை வாசிம் ஜாபர், ராஜ்குமார் ஆகியோருக்கு பின் அவர் படைத்தார். இப்படி ரன் மெஷினாக ரன்களைக் குவித்து வரும் போதிலும் அவரை இந்திய தேர்வு குழுவினர் கண்டு கொள்ளாமலேயே இருப்பதால் பைனலில் வெறித்தனமாக பேட்டிங் செய்த அவர் சதமடித்த பின் கலங்கிய கண்களுடன் இந்தியாவுக்கு விளையாட இன்னும் எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும் என்று தேர்வுகுழுவினரை கேட்காமல் கேட்டது வைரலானது.

- Advertisement -

ப்ராட்மேனை மிஞ்சி:
அதன் பயனா வரும் நவம்பர் மாதம் வங்கதேச டெஸ்ட் தொடரின்போது வாய்ப்பளிக்கப்படும் என்று அவரிடம் தேர்வுக் குழுவில் இடம் வகிக்கும் சுனில் ஜோஷி இந்த போட்டியின் முடிவில் உறுதியளித்துள்ளார். அதைவிட இதுவரை 37 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடியுள்ள அவர் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் 37 இன்னிங்ஸ்களுக்குப் பின் அதிக பேட்டிங் சராசரியை கொண்ட பேட்ஸ்மேன் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை முந்தி புதிய உச்சத்தை எட்டியுள்ளார்.

sarfaraz 2

அந்தப் பட்டியல் இதோ:
1. சர்பராஸ் கான் : 2530 ரன்கள், 81.61 சராசரி, 8 சதங்கள், 7 அரைசதங்கள் (டிசம்பர் 2014 – ஜூன் 2022 வரை)*
2. டான் பிராட்மேன் : 2377 ரன்கள், 79.23 சராசரி, 10 சதங்கள், 7 அரைசதங்கள் (டிசம்பர் 1927 – நவம்பர் 1929 வரை)

மேலும் ஒட்டுமொத்த முதல்தர கிரிக்கெட்டில் அதிக பேட்டிங் சராசரியை கொண்ட 2-வது வீரர் என்ற பெயரை ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு பின் பெற்றுள்ளார். அந்தப் பட்டியல் இதோ ( குறைந்தது 2000 ரன்கள் அடித்தவர்கள்):
1. டான் ப்ராட்மேன் : 95.14
2. சர்பராஸ் கான் : 81.61
3. விஜய் மேற்சன்ட் : 71.64
4. ஜார்ஜ் அட்லி : 69.86
5. பசீர் ஷா : 69.02

Advertisement