
மும்பை அணியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் கடுமையான போராட்டத்திற்கு இந்திய அணிக்காக அறிமுகமாகி விளையாடி வருகிறார். கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர் அடுத்தடுத்த போட்டிகளில் அரை சதமடித்து வெற்றிகளில் பங்காற்றினார். அதைத் தொடர்ந்து அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர் இந்திய அணிக்காக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை. எனவே வங்கதேச டெஸ்ட் தொடரில் விராட் கோலியுடன் இந்திய அணியின் உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாக சர்பராஸ் கான் கூறியுள்ளார். மேலும் 2013 ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் 45* (21) ரன்கள் அடித்த போது விராட் கோலி தமக்கு தலைவணங்கியதை மறக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் தொடர்ந்து கடினமாக உழைத்து சிறப்பாக விளையாட வேண்டும் என்ற விஷயங்களை விராட் கோலியிடம் கற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் சர்பராஸ் கான் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு பொருத்த முடியாதது”
“அணி மீட்டிங்கில் பார்க்கும் போது கூட அவர் முன்னே வந்து பேசி எந்த பவுலர்களுக்கு எதிராக எவ்வளவு ரன்கள் அடித்தேன் என்பது பற்றி எங்களுக்கு சொல்வார். அவரைப் போல எல்லோர் முன்னிலையிலும் நேர்மறையாக நின்று பேசும் அளவுக்கு தைரியமாக இருப்பதும் மறுநாளே அதை செயலில் வழங்குவதும் ஒரு தனித்துவமான திறமையாகும். அவரை முதல் முறையாக சின்னசாமி மைதானத்தில் பார்த்தேன்”
“அங்கே ஒரு போட்டியில் நான் 21 பந்துகளில் 45 ரன்கள் அடித்த போது அவர் எனக்கு தலை வணங்கினார். வருங்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் அவருடன் இந்திய அணியில் உடை மாற்றும் அறையை பகிர்ந்து கொள்வது என் கனவாகும். விராட் கோலி எப்போதும் தன்னுடைய ஆட்டத்தில் தெளிவாக இருப்பார். ஒரு வீரர் செய்ய வேண்டிய பணியை தொடர்ந்து செய்தால் விமர்சனம் அல்லது பாராட்டு உங்களை பாதிக்காது என்பது அவருக்கு தெரியும்”
இதையும் படிங்க: தோனி, கோலி மாதிரி அந்த திறமையை கொண்ட கில்.. ரோஹித் போல சூப்பர்ஸ்டாரா வருவாரு.. ஆகாஷ் சோப்ரா
“இது என் வேலை இதை காலை மதியம் மாலை நேரங்களில் செய்துவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் தூங்க வேண்டும் என்பதை விராட் கோலி சரியாக செய்வார். அதைத்தான் அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டுள்ளேன்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்க உள்ளது.