மும்பையை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் இந்தியாவுக்காக விளையாட உள்ளூரில் பெரிய ரன்கள் குவித்து போராடினார். இருப்பினும் கொஞ்சம் உடல்பருமனாக இருந்த காரணத்தாலும் சீனியர்கள் இருந்ததாலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மனம் தளராமல் போராடிய அவருக்கு ஒரு வழியாக கடந்த 2024 இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பில் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்த சர்ப்ராஸ் கான் நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியில் தனியாளாக 150 ரன்கள் அடித்து வெற்றிக்குப் போராடினார். இருப்பினும் வெளிநாட்டில் அசத்த மாட்டார் என்ற கருத்துடன் கடந்த ஆஸ்திரேலியா மற்றும் நடப்பு இங்கிலாந்து தொடரிலும் அவரை தேர்வுக்குழு கழற்றி விட்டது. ஆனால் இங்கிலாந்து லயன்ஸ்க்கு எதிரான பயிற்சிப் போட்டிகளில் பெரிய ரன்கள் குவித்த அவர் வெளிநாட்டிலும் தம்மால் அசத்த முடியும் என்பதை நிரூபித்தார்.
பாண்டா கரடி:
இதற்கிடையே ஐபிஎல் தொடரில் தேர்வாகாத அவர் தன்னுடைய உடல் எடையைக் குறைத்து வருகிறார். அது உச்சமாக 2 மாதங்களில் 17 கிலோ எடை குறைத்துள்ள அவர் தனது புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்க்கும் ரசிகர்கள் சர்பராஸ் கானா இது என்று வியந்து பாராட்டுகிறார்கள்.
மேலும் பிரிதிவி ஷா இவரைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சர்பராஸை முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார். இந்நிலையில் தம்மை பாண்டா கரடி என்று அழைத்தவர்கள் தற்போது மச்சோ என்று பாராட்டுவதாக சர்பராஸ் கான் கூறியுள்ளார். அதற்கு விராட் கோலி கொடுத்த ஆலோசனை உத்வேகத்தைக் கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
விராட் கோலி அட்வைஸ்:
“எனது மேம்பட்ட ஃபிட்னெஸ் எனக்கு அதிக ரன்கள் குவித்து முன்னிலைப் பெற உதவுவதாக உணர்ந்தேன். ஒரு கட்டத்தில் நான் அதிகம் சாப்பிட்டதால் எனது சக வீரர்கள் அனைவரும் என்னை பாண்டா என்றழைத்தனர். இப்போது அவர்கள் என்னை மச்சோ என்றழைக்கத் துவங்கியுள்ளார்கள். அது என்னுடைய செல்லப் பெயர் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்”
இதையும் படிங்க: 35 வருடம் 10 விக்கெட்ஸ்.. அனில் கும்ப்ளே போல அறிமுகம்.. தோனியின் பாராட்டுக்குரிய யார் இந்த அன்சுல் கம்போஜ்
“என்னுடைய சுமாரான ஃபிட்னஸ் காரணமாக நான் 2016 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியிலிருந்து நீக்கப்பட்டேன். அங்கே என்னுடைய திறமையில் சந்தேகமில்லை, ஆனால் என்னுடைய ஃபிட்னஸ் என்னை அடுத்த லெவலை தொடவிடாமல் செய்ததாக விராட் கோலி என்னிடம் நேரடியாகச் சொன்னார். அந்த சமயத்தில் நான் எங்கே இருக்கிறேன் என்பதை அவர் உண்மையாக வெளிப்படையாக சொன்னார்” எனக் கூறினார்.



