இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நகரில் துவங்கியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றிகள் பெற்றன. எனவே பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கிய இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 326/5 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 10, கில் 0, ரஜத் படிடார் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 33/3 என தடுமாறிய இந்திய அணியை நான்காவது விக்கெட்டுக்கு 204 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அனைத்து தூக்கி நிறுத்திய கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்து 131 ரன்கள் எடுத்தார்.
அதிரடி சாதனை:
அவருடன் சேர்ந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா சொந்த ஊரில் சதமடித்து 110* ரன்கள் குவித்து இன்னும் களத்தில் நங்கூரமாக விளையாடி வருகிறார். அதே போல ரோஹித் சர்மா அவுட்டானதும் களமிறங்கியதும் இளம் வீரர் சர்பராஸ் கான் சிறப்பாக செயல்பட்டு 62 ரன்கள் குவித்து இந்திய அணியை வலுப்படுத்தி ஆட்டமிழந்தார். முன்னதாக கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்து வந்த சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் இப்போட்டியில் அறிமுகமாக களமிறங்கினார்.
பொதுவாக அறிமுக போட்டியில் நிறைய வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்க்க முயற்சிப்பார்கள். ஆனால் தன்னுடைய அறிமுக போட்டியில் களமிறங்கியது முதலே இங்கிலாந்தின் பஸ்பால் போல அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 48 பந்துகளில் 104.20 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் அடித்து அரை சதமடித்தார். அப்போது மைதானத்தில் இருந்த அவருடைய தந்தை மற்றும் மனைவி ஆகியோர் மிகுந்த பெருமிதத்துடன் கைதட்டி பாராட்டினார்கள்.
அதே போல கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அடங்கிய இந்திய அணியினரும் எழுந்து நின்று அந்த இளம் வீரருக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியிலேயே 2வது அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் என்ற ஹர்திக் பாண்டியாவின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.
இதையும் படிங்க: ஜடேஜாவின் முடிவால் மனமுடைந்த சர்பராஸ் கான்.. கோபத்தில் தொப்பியை எறிந்த ரோஹித் சர்மா.. நடந்தது என்ன?
இதற்கு முன்பாக கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஹர்திக் பாண்டியாவும் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அந்த சாதனையை படைத்துள்ளார். அந்த வகையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சர்பராஸ் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்த போது துரதிஷ்டவசமாக ரவீந்திர ஜடேஜாவின் தவறான அழைப்பால் ரன் அவுட்டாகி சென்றது குறிப்பிடத்தக்கது.