அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல மிக முக்கியமான காரணமாக துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த தொடரின் 5 போட்டிகளில் விளையாடிய அவர் 321 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியதோடு தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார்.
தனக்கு உதவிய யுவ்ராஜ் சிங் மற்றும் உத்தப்பாவுக்கு நன்றி தெரிவித்த : சஞ்சு சாம்சன்
அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் தான் இக்கட்டான நிலையில் இருந்த போது தனக்கு உதவ முன்வந்த முன்னாள் அனுபவ வீரர்கள் குறித்தும் சில கருத்துக்களை தொடர்ச்சியாக சஞ்சு சாம்சன் வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் முன்னாள் இந்திய வீரர்களான யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா ஆகியோர் தனக்கு எவ்வாறு அறிவுரைகளை வழங்கினார் என்பது குறித்தும் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த உலக கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் என்னை தொடர்பு கொண்டு நண்பா உனக்கு உலகக்கோப்பை வருகிறது. என்னுடன் சிறிது நேரம் செலவிடுவது நிச்சயம் உனக்கு உதவும் என்று கூறினார்.
இப்படி ஒரு அனுபவ வீரர் என்னை அழைத்து பேசியதும் நானும் அவரின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள விரும்பி அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ராபின் உத்தப்பாவும் என்னை தொடர்பு கொண்டார். அவருடனும் நான் போதிய அளவு நேரம் செலவிட்டேன். இந்திய அணிக்காக இரண்டு மூன்று உலக கோப்பையை வென்றுள்ள அவர்கள் எனக்கு நிச்சயம் ஆலோசனைகளை வழங்கி ஊக்குவிப்பார்கள் என்பதால் அவர்களுடைய அறிவுரைகளை தொடர்ந்து கேட்டு வந்தேன்.
இதையும் படிங்க : கே.கே.ஆர் அணி ரிங்கு சிங்கை இப்படி யூஸ் பண்ணா அந்த அணி ஸ்ட்ராங் ஆகிடும் – ரெய்னா யோசனை
அவர்களுக்கு உரிய மரியாதையும் கொடுத்து அவர்கள் பகிர விரும்பியதை அனைத்தையும் கேட்டுக் கொண்டேன். அவர்கள் இருவரும் எனக்கு கொடுத்த அறிவுரைகள் களத்தில் எனக்கு உதவியாக இருந்ததாகவும் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சஞ்சு சாம்சன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



