இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கடந்த 2015-ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானாலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடந்த சில ஆண்டுகளாக தான் இந்திய அணியில் விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக அறிமுகமாகி 9 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இதுவரை அவர் 50 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
எனக்கு டெஸ்ட் வாய்ப்பு காத்திருக்கிறது :
சிறப்பான திறமை இருந்தும் அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று பேசப்பட்டு வந்த வேளையில் தற்போது அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் ஒரு சில ஆட்டங்களில் அவர் சொதப்பி இருந்தாலும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ள இந்திய அணி நிர்வாகம் தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
அதோடு அவரின் திறமை மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீரும் அவருக்கு ஆதரவாக நின்று வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு வழங்கினர். அந்த வகையில் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் வங்கதேசம் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்து தான் யார் என்பதை மீண்டும் ஒருமுறை சஞ்சு சாம்சன் நிரூபித்துள்ளார்.
இதன் காரணமாக இனி அவருக்கு தொடர்ச்சியான ஆதரவு நிர்வாகத்திடம் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சிவப்பு பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் திறன் என்னிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
நான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாட விரும்பவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதும் தான் என்னுடைய ஆசை. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் நிர்வாகம் என்னிடம் சிவப்பு பந்தில் பயிற்சி செய்யுமாறு கூறியுள்ளது. அதுமட்டும் இன்றி உள்ளூர் கிரிக்கெட்டில் சிவப்பு பந்தில் சிறப்பாக விளையாடினால் டெஸ்ட் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : இந்திய அணி யாரையும் நம்பில்ல.. ஷமிக்கு பதிலா அந்த 2 இளம் வீரர்கள் ஆஸிக்கு வரலாம்.. ரோஹித் பேட்டி
இதன் காரணமாக நான் ரஞ்சி டிராபி போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருக்கிறேன். இந்திய அணியின் நிர்வாகமும் என்னிடம் அடுத்து அதைத்தான் விரும்புகிறது. எனவே உள்ளூர் போட்டிகளில் சிவப்பு பந்தில் என்னுடைய திறமையை நிரூபித்து நிச்சயம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.



