
2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சனை சி.எஸ்.கே அணி டிரேடிங் முறையில் தங்களது அணிக்குள் கொண்டு வந்தது. தோனிக்கு அடுத்து சென்னை அணிக்கு நீண்டகால விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை என்கிற காரணத்தினால் சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் அவரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது.
இவ்வேளையில் தற்போது நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் அவர் சென்னை அணிக்காக துவக்க வீரராக விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் பெரியளவில் ரன் குவிக்காமல் தடுமாற்றத்தை சந்தித்த சஞ்சு சாம்சன் நேற்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது 56 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 115 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அவரது இந்த அதிரடியான ஆட்டம் காரணமாக சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதினை வென்ற சஞ்சு சாம்சன் தான் இந்த போட்டியில் சதம் அடித்தது குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே இந்த சதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை அணியின் நிர்வாகம் என் மீது மிகப்பெரியளவில் நம்பிக்கை வைத்திருக்கிறது.
அதன் காரணமாகவே அவர்கள் என்னை டிரேடிங் முறையில் அணிக்குள் கொண்டு வந்தார்கள். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பதில் கொடுக்கும் வகையில் நான் இன்று ஒரு சிறப்பான சதத்தை விளாசியுள்ளேன். இனிவரும் போட்டியிலும் இதேபோன்ற ஆட்டத்தை நான் தொடர்வேன். இப்போது தொடரின் ஆரம்பத்தில்தான் இருக்கிறோம். இனிவரும் போட்டிகளிலும் இதேபோன்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தலாக செயல்படுவேன்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கெதிரான தோல்விக்கு இதுதான் காரணம்.. டெல்லி கேப்டன் அக்சர் படேல் பேட்டி
சி.எஸ்.கே அணிக்கு தற்போது புதிதாக வந்துள்ளதால் சற்று இந்த அணிக்கு ஏற்றார்போல் தகவமைத்து கொள்ள நேரம் இருக்கிறது. ஆனாலும் இது வேறு ஒரு அணி போன்று எனக்கு தெரியவில்லை. நான் என்னுடைய மற்றொரு சொந்த வீட்டிற்கு வந்தது போல ஒரு உணர்வு இருக்கிறது. சென்னை அணியின் ரசிகர்களும் எனக்கு மிகச் சிறப்பான ஆதரவை வழங்கி வருகின்றனர் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.