இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக 2015 ஆம் ஆண்டு அணியில் இடம் அறிமுகமானாலும், அதன் பிறகு மீண்டும் அணியில் விளையாட கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் காத்திருந்தார். சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்து விளையாடிய சஞ்சு சாம்சன் சற்று ஏமாற்றத்தை அளித்தாலும் அவர் மீது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அதிக அளவு நம்பிக்கை வைத்துள்ளது என்று கூறலாம்.

ஏனெனில் உள்ளூர் தொடர்களில் இவரது ஆட்டம் வேற லெவலில் உள்ளது. தற்போது இந்திய அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் பண்ட் சற்று சுமாராக செயல்பட்டு வருவதால் அவருக்கு பதில் ராகுல் கீப்பராக விளையாடி வருகிறார். ஆனால் பண்டின் விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் வரவேண்டும் என்று முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அதற்கேற்றார்போல் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் மட்டுமின்றி பேட்டிங் வேட்டையிலும் அசத்துகிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடும் சாம்சங் தனது அசாத்தியமான கிரிக்கெட்டின் ஷாட்டுகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் தோனியுடன் இருந்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் சாம்சன் கூறியதாவது :

ஜார்கண்டின் ராஞ்சியிலிருந்து வந்து இந்தியாவின் மிகப் பெரிய வீரராக தோனி உருவாகியுள்ளார். அவரைப்பற்றி நான் எப்போது பேச நினைத்தாலும் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறான் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் : தோனியின் போட்டியை கவனமாக கவனித்து அதை காப்பி அடிக்க நீங்கள் முயற்சிக்கலாம். ஆனால் தோனியின் ஸ்டைலை யாராலும் கணிக்க முடியாது அவரது இடத்தை பூர்த்தி செய்வது என்பது மிகவும் கடினம்.
நான் முதல் முதலில் தோனியை என் கனவில் தான் பார்த்தேன். அப்போது அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார் நான் ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது தோனி என்னிடம் வந்து இங்கே நிற்க வேண்டாம் அங்கே செல் என்பதுபோல கூறினார். இது என் கனவில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சி. ஆனால் நான் கனவு கண்ட அடுத்த சில தினங்களிலேயே தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

அதனால் என் கனவு நினைவாகாமல் போய் விடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நாள் என் கனவு நினைவாகும் ஒருநாள் வந்தது. அதன்படி இந்திய ஏ அணி இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய ஏ அணிக்கு தோனியை தலைமை தாங்கும்படி இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதன்படி தோனி அந்த போட்டியில் கேப்டன்ஷிப் செய்தார்.
அதே போட்டியில் நான் ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்தபோது தோனி என்னிடம் வந்து இங்கு நிற்கவேண்டாம் சற்று அங்கு போய் நில் என்றார். நான் என் கனவில் கண்ட அதே இடம் மற்றும் அதே வார்த்தைகளை தோனி என்னிடம் சொன்னபோது என் கனவு நினைவானது போன்று இருந்தது. இதை நான் அவரிடம் நிச்சயம் நேரில் சொல்ல வேண்டும் அப்படி நான் சொல்லும்போது அவரின் முகத்தில் புன்னகையை அது கண்டிப்பாக வரவைக்கும் என்றும் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சியாக கூறியது குறிப்பிடத்தக்கது



