
கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமானார். அப்போதிலிருந்து இதுவரை அவருக்கு நிலையான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது பலருடைய விமர்சனமாக இருந்து வருகிறது. ஏனெனில் இந்தியாவுக்காக இதுவரை அவருக்கு தொடர்ச்சியாக 10 போட்டிகளில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சொல்லலாம். அதே போல ஆரம்ப காலங்களில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்றும் சொல்லலாம்.
இருப்பினும் சமீபத்திய வருடங்களில் தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் சஞ்சு சாம்சன் ஓரளவு நன்றாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக கடந்த 2023 டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர் 2 போட்டிகளின் முடிவில் சமனில் இருந்தது. அப்போது 3வது போட்டியில் மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய அவர் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
சாம்சன் பதில்:
ஆனால் அதற்கு அடுத்ததாக இந்தியா விளையாடிய 2024 இலங்கை ஒருநாள் தொடரில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. குறிப்பாக புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் கூட அவருக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதனால் சஞ்சு சாம்சனுக்கு அநியாயமாக வாய்ப்பு கொடுக்கவில்லை என்று சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விமர்சித்தனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் இது பற்றி சஞ்சு சாம்சனிடம் செய்தியாளர் நேரடியாக கேட்டார். இது பற்றி செய்தியாளர் கேட்டது பின்வருமாறு. “தென்னாப்பிரிக்காவில் நீங்கள் சதமடித்தும் ஒருநாள் அணியில் நீக்கபட்டீர்கள். ஒருநாள் உலகக்கோப்பை நடைபெற்ற வருடத்தில் 20 ஓவர் போட்டிகளில் விளையாடிய நீங்கள் டி20 உலகக் கோப்பை நடைபெற்ற வருடத்தில் 50 ஓவர் போட்டிகளில் விளையாடினீர்கள். உங்களுடைய இந்த குளறுபடியான தேர்வு பற்றி நினைப்பது என்ன?”
அதற்கு சஞ்சு சாம்சன் பதிலளித்தது பின்வருமாறு. “அவர்கள் என்னை அழைக்கும் போது நான் விளையாட செல்ல வேண்டும். அழைக்கவில்லை என்றால் பரவாயில்லை. அணி நன்றாக செயல்படும் போது அதைப்பற்றி நான் அதிகமாக சிந்திக்கக்கூடாது. நான் நேர்மறையாக இருந்து என்னால் என்ன கட்டுப்படுத்த முடியுமோ அதில் கவனம் செலுத்துகிறேன். அதே சமயம் கடினமாக உழைத்து என்னுடைய ஆட்டத்தை முன்னேற்றுவதற்கு அதிகப்படியான பயிற்சிகளை எடுக்கிறேன்”
இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியாவை தாண்டி சூரியகுமார் யாதவ் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டதுக்கு காரணம் இதுதான் – ரவி சாஸதிரி விளக்கம்
“அந்த வகையில் என்னுடைய கேரியரை நான் முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறேன். என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி எனது ஆட்டத்தை முன்னேற்ற விரும்புகிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்திய அணி பெரும்பாலும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. எனவே அவருக்கு அடுத்த வருடம் தான் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.