ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் தயாராகி வருகிறது. அதற்கு இந்திய அணி தொடர்ச்சியாக பெரும்பாலான போட்டிகளில் 200 ரன்களை குவிப்பது அவசியமாகிறது. அதை செய்வதற்கு ஓப்பனிங் ஜோடி அதிரடியாக பெரிய ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தைக் கொடுப்பது அவசியமாகிறது.
அதை செய்ய வேண்டுமெனில் அடித்து நொறுக்கும் அபிஷேக் சர்மாவுக்கு நிகராக சுப்மன் கில்லும் அதிரடியாக விளையாட வேண்டியுள்ளது. ஆனால் கடந்த 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காத அவர் மோசமான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உண்மையில் அபிஷேக் ஷர்மாவுடன் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் 3 சதங்கள் அடித்து நிலையான இடத்தைப் பிடித்தார்.
அதிரடி வேணும்ன்னா:
ஆனால் திடீரென சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைக்கும் தேர்வுக்குழு அவரை டி20 அணியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தது. அதனால் சாம்சனை கழற்றி விட்ட கம்பீர் ஓப்பனிங் கில்லை விளையாட வைத்துள்ளார். இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஓப்பனிங் ஜோடி அடித்து நொறுக்கக்கூடியதாக இருக்க வேண்டுமெனில் ஓப்பனிங்கில் சாம்சனை விளையாட வைக்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா அறிவுறுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அபிஷேக் ஷர்மா போன்ற வீரருக்கு நீங்கள் சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும். மறுபுறம் அவருக்கு சுப்மன் கில் உதவி செய்ய வேண்டுமா? அல்லது அபிஷேக் ஷர்மாவுடன் வலுவான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த சஞ்சு சாம்சனுக்கு சுதந்தரத்தை கொடுக்க வேண்டுமா? என்பது கேள்வியாகும். இங்கே சுப்மன் கில் தலைமுறையில் ஒருமுறை வரக்கூடிய ஆல் ஃபார்மட் பேட்ஸ்மேன் என்பதை நான் மறுக்கவில்லை.
சாம்சன் வேணும்:
“ஆனால் சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் அவர் குழப்பமடைந்தது போல் தெரிகிறது. அங்கே ரன்கள் அடிப்பதற்கான வழிமுறைகள் இருக்கிறது. அவரால் ஐடன் மார்க்கம் அல்லது 2024 டி20 உலகக் கோப்பையில் 140 – 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய விராட் கோலியை போன்ற முறையான கிரிக்கெட்டை விளையாட முடியும். சொல்லப்போனால் அந்த முறை தான் அவருக்கு ஐபிஎல் தொடரில் வேலை செய்தது”
இதையும் படிங்க: திறமையான சூரியகுமார் ஃபார்முக்கு வர இதை செஞ்சா போதும்.. கேப்டன்ஷிப் நல்லாருக்கு.. திவாரி அட்வைஸ்
“ஆனால் தற்போது அதிலிருந்து நகர்ந்த அவர் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முயற்சிப்பது போல் தெரிகிறது. அதுவே அவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. ஒருபுறம் அவர் நங்கூரமாக விளையாடுவது எதிர்ப்புறம் அபிஷேக் சர்மா அதிரடி காட்டுவதற்கு பொருத்தமாக இருக்கும். இருப்பினும் ஒருவேளை இந்தியா ஓப்பனிங்கில் அடித்து நொறுக்கும் அணுகுமுறையை விரும்பினால் சாம்சன் சிறப்பாக பொருந்துவார்” என்று கூறினார்.



