சஞ்சு சாம்சனை அங்கீகரித்த பிசிசிஐ, ரசிகர்கள் கொடுத்த அழுத்தத்தின் வெற்றி என முன்னாள் பாக் வீரர் பாராட்டு

Samson
- Advertisement -

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலக கோப்பையில் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் நீண்ட காலமாக அதிகப்படியான வாய்ப்புகளை பெற்று சுமாராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் காலம் காலமாக வாய்ப்புக்காக தவமாய் காத்துக்கிடக்கும் சஞ்சு சாம்சன் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட சேர்க்கப்படாதது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த 2015இல் இந்தியாவுக்காக அறிமுகமானாலும் 2வது போட்டியை கடுமையான போராட்டத்திற்குப் பின் கடந்த 2019இல் விளையாடினார். அதன்பின் 1 வருடத்திற்கு ஒருமுறை 6 மாதத்திற்கு ஒருமுறை போராடிப் போராடி அணிக்குள் நுழைந்த அவரை காரணமின்றி அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் கழற்றிவிட்டு வந்தது.

Rishabh Pant Sanju Samson

- Advertisement -

இருப்பினும் தொடர்ந்து மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடி வந்த அவர் 2022 சீசனில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ராஜஸ்தானை பைனலுக்கு அழைத்துச் சென்றும் அதன்பின் நடந்த தென் ஆப்ரிக்க தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு பதில் சொல்ல முடியாத தேர்வுக்குழு அதைத் தொடர்ந்து நடந்த அயர்லாந்து டி20 தொடரில் கொடுத்த வாய்ப்பில் 2வது போட்டியில் தீபக் ஹூடாவுடன் 176 ரன்கள் சாதனை ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் முறையாக அரை சதமடித்த சஞ்சு சம்சன் 77 விளாசினார்.

மழுப்பும் பிசிசிஐ:
அதனால் இனிமேல் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்ததாக நடந்த இங்கிலாந்து தொடரிலேயே மீண்டும் கழற்றி விடப்பட்ட சஞ்சு சாம்சன் அதைத்தொடர்ந்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் சேர்க்கப்பட்டார். அதில் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்ட அவர் ஜிம்பாப்வே தொடரில் முதல் முறையாக ஆட்டநாயகன் விருது வென்று சாதித்துக் காட்டிய போதிலும் டி20 உலக கோப்பையில் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட சேர்க்கப்படவில்லை. அதனால் மீண்டும் சமூக வலைதளங்களில் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவை சரமாரியாக விமர்சித்து ரசிகர்கள் தேசிய அளவில் டிரென்ட் செய்தார்கள்.

Sanju Samson

அவர்களை கோபத்தைத் தணிப்பதற்காக விரைவில் சென்னையில் நடைபெறும் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய ஏ அணிக்கு சஞ்சு சாம்சனை கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இருப்பினும் இது வருடக்கணக்கில் இழைத்து வரும் அநீதியை மறைக்கும் செயல் என்று மீண்டும் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். ஆனால் தேசத்துக்காக எந்த அணியின் கேப்டனாக செயல்பட்டாலும் அது மிகப்பெரிய பெருமை என்று இந்த முடிவை வரவேற்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா இது ரசிகர்கள் பிசிசிஐக்கு தொடர்ந்து கொடுத்த அழுத்தத்துக்கு கிடைத்த வெற்றி என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

ரசிகர்களின் வெற்றி:
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் அவருடைய பேட்டிங் ஸ்டைல் அவரை துருப்புச்சீட்டு வீரராக பயன்படுத்த உதவும். குறிப்பாக பவுன்ஸ் நிறைந்த ஆடுகளங்களில் அவரைத்தவிர யாரும் சிறப்பாக விளையாட முடியாது. இருப்பினும் தற்போது அவர் இந்திய ஏ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யாததால் பிசிசிஐ கடுமையான அழுத்தத்தை சந்தித்த காரணத்தாலேயே அவரிடம் தற்போது இந்தியா ஏ கேப்டன்ஷிப் பதவியை கொடுத்துள்ளது”

Kaneria

“உங்களது நாட்டுக்காக எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் அதனுடைய கேப்டனாக நீங்கள் விளையாடுவது மிகப்பெரிய பெருமையாகும். மேலும் இது சஞ்சு சாம்சனுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாகும். இந்த வாய்ப்பில் அவரது தலைமையில் இந்தியா ஏ அணி வென்றால் வருங்காலம் அவருக்கு மேலும் சிறப்பாக அமையும்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல ஒவ்வொரு முறையும் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படும் போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ட்ரெண்ட் செய்த காரணத்தாலேயே இன்று குறைந்தபட்சம் ஏ அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் இது ரசிகர்களின் வெற்றி என்று தெரிவிக்கும் டேனிஷ் கனேரியா இந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கேப்டனாக தொடரை வென்று இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை சஞ்சு சாம்சன் மேலும் அதிகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement