சஹால் ஹாட்ரிக் எடுத்தாலும் வெற்றிக்கு அஷ்வின் தான் காரணம் ! கொல்கத்தாவை சாய்த்த பின் கேப்டன் சாம்சன் பாராட்டு

Ashwin Dismisses Russell
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதின. ப்ராபோர்ன் மைதானத்தில் கடைசி ஓவர் வரை அனல் பறந்த அப்போட்டியில் கொல்கத்தாவை வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து திரில் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான் 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 217/5 ரன்களை குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்க கொல்கத்தா பவுலர்களை புரட்டி எடுத்த நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் 61 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட இந்த வருடத்தின் 2-வது சதத்தை குவித்து 103 ரன்களை விளாசினார். இறுதியில் சிம்ரோன் ஹெட்மையர் 26* (13) ரன்களுடன் நல்ல பினிஷிங் கொடுக்க கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் அசத்திய சுனில் நரேன் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

போராடிய கொல்கத்தா, சஹால் மேஜிக்:
அதை தொடர்ந்து 218 என்ற பெரிய இலக்கை துரத்திய கொல்கத்தா எவ்வளவோ போராடிய போதிலும் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது. அந்த அணிக்கு முதல் பந்திலேயே சுனில் நரேன் ரன் ஏதுமின்றி எதிர்பாராத வகையில் ரன் அவுட்டாக அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றொரு தொடக்க வீரர் ஆரோன் பின்ச் உடன் இணைந்து அதிரடியாக ரன்களை அடித்தார்.

வெறும் 9 ஓவர்களில் பட்டாசாக விளையாடிய இந்த ஜோடி 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொல்கத்தாவை காப்பாற்றிய நிலையில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் உட்பட 58 (18) ரன்கள் எடுத்து ஆரோன் பின்ச் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த நிதிஷ் ராணா 18 (11) ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் அஷ்வின் வீசிய மேஜிக் பந்தில் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் மறுபுறம் 7 பவுண்டரி 4 சிக்சர்கள் உட்பட அரைசதம் கடந்து 85 (51) ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் அய்யர் வெற்றிக்காக தொடர்ந்து போராடினார்.

- Advertisement -

அதன் காரணமாக கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 40 ரன்கள் தேவை என்ற நிலைமையில் 17-வது ஓவரை வீசிய சஹால் மாயாஜாலம் நிகழ்த்தினார் என்றே கூறவேண்டும். ஏனெனில் முதல் பந்திலேயே வெங்கடேஷ் ஐயரை 6 (7) ரன்களில் அவுட் செய்த அவர் 4-வது பந்தில் முக்கியமான ஷ்ரேயஸ் ஐயரை காலி செய்து 5, 6 ஆகிய பந்துகளில் ஷிவம் மாவி, பட் கம்மின்ஸ் என அடுத்து களமிறங்கிய வீரர்களை அடுத்தடுத்த பந்துகளில் அவுட் செய்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார்.

கருப்பு குதிரை அஷ்வின்:
இறுதியில் உமேஷ் யாதவ் அதிரடியாக 21 (9) ரன்கள் விளாசிய போதிலும் போராடித் தோற்ற கொல்கத்தா 7 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்திற்கு பின்தங்கியது. ராஜஸ்தானின் இந்த பரபரப்பான வெற்றிக்கு ஜோஸ் பட்லர் சதமடித்து முக்கிய பங்காற்றினாலும் அதைவிட ஹாட்ரிக் உட்பட அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை சாய்த்து துருப்புச் சீட்டாக செயல்பட்ட யூஸ்வென்ற சஹால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

இருப்பினும் முக்கிய நேரத்தில் ஆண்ட்ரே ரசலை கோல்டன் டக் அவுட் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின் தான் இந்த திரில் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று போட்டி முடிந்த பின் கேப்டன் சஞ்சு சாம்சன் வெளிப்படையாக பேசினார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மிகவும் பதற்றமடைந்தாலும் இந்த வெற்றியால் மகிழ்ச்சி. இந்த சமயம் கொல்கத்தா அணியையும் மதிக்கிறேன். இந்த போட்டியை வெல்வோம் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்கள் அணியில் அனைவரும் சிறப்பாக செயல்பட்டதால் யாரையும் குறிப்பிட்டு பாராட்ட விரும்பவில்லை. இருப்பினும் ரசலுக்கு ஒரு அற்புதமான பந்தை வீசிய ரவிச்சந்திரன் அஷ்வினை இங்கு ஸ்பெஷலாக குறிப்பிட விரும்புகிறேன்” என கூறினார்.

அதாவது 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷ்ரேயஸ் – பின்ச் ஜோடியில் பின்ச் அவுட்டானதும் களமிறங்கிய நிதிஷ் ராணா அவுட்டானபோது 148/3 என கொல்கத்தா நல்ல நிலைமையில் இருந்தது. அப்போது களமிறங்கிய அதிரடி காட்டடி வீரர் ஆண்ட்ரே ரசல் 14-வது ஓவரை வீசிக்கொண்டிருந்த தமிழக வீரர் அஸ்வின் வீசிய 4-வது பந்தை முதல்முறையாக எதிர்கொண்டார்.

ஆனால் அந்தப் பந்தை அற்புதமாக சுழற்றிய அஸ்வின் ரசலை ஏமாற்றி க்ளீன் போல்டக்கினார். அந்தத் தருணம்தான் போட்டியின் திருப்பு முனையாக அமைந்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாக கேப்டன் சஞ்சு சாம்சன் அஸ்வினை பாராட்டினார். ஏனெனில் அவரை போன்ற ஒருவர் ஒரு ஓவர் நின்றால் போட்டியையே தலைகீழாக மாற்றிவிடுவார்.

மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்காத அஷ்வின் ஒருசில விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த நிலையில் ரசல் போன்ற போட்டியை தலைகீழாக மாற்றக்கூடிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எடுத்ததும் வழக்கத்திற்கு மாறாக விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடும் ஆக்ரோஷத்துடன் அந்த விக்கெட்டை கொண்டாடினார்.

Advertisement