இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி இன்று தற்போது துவங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் மூன்று முக்கிய மாற்றங்களை கோலி அறிவித்தார். அதன்படி இந்த போட்டியில் ராகுலுடன் துவக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.
2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகம் ஆன சாம்சன் அதன்பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் தான் விளையாடினார். அந்த போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்து அடுத்த பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன்பிறகு நியூசிலாந்து தொடரின் டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் இறுதியில் தவான் காயமடைந்து வெளியேறியதால் அதிர்ஷ்ட வசமாக சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத சாம்சனுக்கு இந்த போட்டியில் துவக்க வீரராக வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த போட்டியிலும் ஒரு சிக்ஸர் அடித்த சாம்சன் 5பந்துகளில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் சாம்சன் சர்வதேச போட்டிகளில் சற்று தடுமாறுகிறார் என்றே தோன்றுகிறது. சாம்சனின் திறமை அதிகம் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் ஆனால் அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுக்கவில்லை இதுவே உண்மை.



