
தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நவம்பர் 13ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 219-6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 50, திலக் வர்மா 107* ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 2, சிம்லேன் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பின்னர் 220 ரன்கள் துரத்திய தென்னாப்பிரிக்கா அதிரடியாக விளையாட முயற்சித்தும் 20 ஓவரில் 208-7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 41, மார்கோ யான்சென் 54 ரன்கள் குவித்தார்கள்.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் 2 – 1* (4) என்ற கணக்கில் இந்த தொடரில் இந்தியா முன்னிலை பெற்று வெற்றிக்காக போராடி வருகிறது. முன்னதாக இந்திய வீரர் சஞ்சு சாம்சன் சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியில் சதமடித்தார்.
அதே வேகத்தில் இந்தத் தொடரின் முதல் போட்டியிலும் சதம் அடித்த அவர் மாபெரும் சாதனையும் படைத்தார். ஆனால் இரண்டாவது போட்டியில் டக் அவுட்டான அவர் 3வது போட்டியிலும் 0 ரன்களில் அவுட்டாகி முதல் ஓவரிலேயே ஏமாற்றத்துடன் சென்றார். இதையும் சேர்த்து 2024 ஆம் ஆண்டு விளையாடிய சர்வதேச டி20 போட்டிகளில் அவர் 5 முறை டக் அவுட்டாகியுள்ளார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டாப் 10 அணிகளில் ஒரு காலண்டர் வருடத்தில் 5 முறை டக் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான உலக சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இது போக சர்வதேச டி20 அதிக முறை டக் அவுட்டான இந்திய விக்கெட் கீப்பர் என்ற மோசமான சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ரிஷப் பண்ட் 4 முறை டக் அவுட்டானதே முந்தைய சாதனையாகும்.
இதையும் படிங்க: சொல்ல வார்த்தைகளே இல்ல.. நாட்டுக்காக சதமடிக்க உதவிய அவருக்கு நன்றி.. ஆட்டநாயகன் திலக் வர்மா பேட்டி
அதிலும் வெளிநாட்டு மண்ணில் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் சஞ்சு சாம்சன் 4 முறை டக் அவுட்டாகியுள்ளார். 1 சதம் அடித்துள்ளார். இதிலிருந்து ஒன்று அடித்தால் சதம் இல்லையேல் டக் அவுட் என்ற வகையில் சஞ்சு சாம்சன் விளையாடுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள். இதை அடுத்து இந்த தொடரின் கடைசி போட்டி நவம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.