தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி அதனுடைய சொந்த மண்ணில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி நவம்பர் எட்டாம் தேதி தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்கியது. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 7 ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக கடைசியாக விளையாடிய போட்டியில் சதமடித்த அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதே வேகத்தில் இந்தப் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை வெளுத்து வாங்கிய அவர் வேகமாக ரன்கள் குவித்தார்.
சாம்சன் சரவெடி:
தொடர்ந்து அசத்திய அவர் 27 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார். அவருடன் எதிர்புறம் சேர்ந்து நிதானமாக விளையாடிய கேப்டன் சூரியகுமார் இரண்டாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 21 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த திலக் வர்மா தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி மூன்றாவது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 33 (18) ரன்களில் அவுட்டானார்.
அவர்களுடன் சேர்ந்து மறுபுறம் தொடர்ந்து தென்னாப்பிரிக்க பவுலர்களை பட்டாசாக வெளுத்து வாங்கிய சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 100 ரன்கள் தொட்டார். இதன் வாயிலாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் சூரியகுமார் யாதவ் 55 பந்துகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 100 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
வேறு இந்தியர்கள் செய்யாத சாதனை:
இது போக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் சஞ்சு சாம்சன் நிகழ்த்தினார். தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய சாம்சன் 7 பவுண்டரி 10 சிக்ஸருடன் 107 (50) ரன்களை 214.00 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 2, ரிங்கு சிங் 11, அக்சர் படேல் 7 ரன்களில் அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.
இதையும் படிங்க: நாங்களும் இதைத் தான் எதிர்பாத்தோம்.. முதல் தெ.ஆ டி20.. இந்திய பிளேயிங் லெவன் அறிவித்த சூரியகுமார்
இறுதியில் 20 ஓவரில் இந்தியா 202-8 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்க அணிக்கு அதிகபட்சமாக ஜெரால்டு கோட்சி 3 விக்கெட்டுகளை எடுத்தார். குறிப்பாக கடைசி 6 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே கொடுத்து தென்னாபிரிக்க அணி 220 ரன்கள் அடிக்க வேண்டிய இந்திய அணியை கொஞ்சம் கட்டுப்படுத்தியது. இதை அடுத்து இலக்கை கட்டுப்படுத்தி வெல்லும் முனைப்புடன் இந்தியா பந்து வீசி வருகிறது



