இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. அதோடு 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்ற இந்திய அணி தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணிக்காக இவர் அற்புதம் செய்கிறார் :
பெர்த் நகரில் இந்த குறிப்பிட்ட மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்கள் மட்டுமே குவித்ததால் நிச்சயம் சரிவை சந்திக்கப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கேப்டன் பும்ராவின் அசத்தலான வழிகாட்டுதலின் கீழ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.
அதோடு அந்த குறிப்பிட்ட ஆப்டஸ் மைதானத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்துள்ளதால் இந்த தொடரில் அவர்கள் அணியை வீழ்த்த இன்னும் கடுமையாக போராட வேண்டியது அவசியம் என்பதும் தெளிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த ஆட்டநாயகன் பும்ராவை பலரும் பாராட்டி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கரும் பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
நான் இந்த போட்டியை பொறுத்தவரை பும்ரா செயல்பாட்டை மிகவும் ரசித்தேன். அவரது கரியரிலேயே இந்த போட்டியில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஒரு கட்டத்தில் டிராவிஸ் ஹெட் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானமும் பேட்டிங் இருக்கு சாதகமாக மாறியது. அப்போது ஹெட்டுக்கு எதிராக மிகச் சிறப்பாக பந்துவீசி அவரை பும்ரா வீழ்த்தி இருந்தார்.
ஹெட் தொடர்ந்து ஆடி இருந்தாலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றிருக்காது இருந்தாலும் தேவையான நேரத்தில் அவரை வீழ்த்த வேண்டிய நிலை இருந்தபோது பும்ரா அதை செய்து காண்பித்தார். ஒரு கேப்டனாக முன் நின்று இப்படி ஒரு ஆடுகளத்தில் அவர் பந்து வீசியது என்னை வியக்க வைத்தது. எப்போதெல்லாம் இந்திய அணிக்கு தேவையோ அப்போதெல்லாம் வந்து விக்கெட் எடுக்கும் ஒரு பூதம் போல பும்ரா இருக்கிறார்.
இதையும் படிங்க : 13 வயது சாதனை வீரர் 1.10 கோடிக்கு வாங்கப்பட்டது எப்படி? முஷீர் கானுக்கு வாய்ப்பு.. சர்பராஸ்க்கு ஏமாற்றம்
அவர் செய்யும் அனைத்து விஷயங்களும் மேஜிக்காக இருக்கிறது என்று சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டியுள்ளார். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் டிசம்பர் 5-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ள வேளையில் மீண்டும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அந்த போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.



