
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியாவுக்காக இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளர் ஆவார். இருப்பினும் அவருக்கு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் இருந்து வந்தது.
அதன் காரணமாக வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருடைய இடத்தை அடுத்ததாக நிரப்பப் போவது யார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தை மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் நிரப்புவதற்கான திறமைகளை கொண்டுள்ளதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா பெரிய சரிவை சந்தித்தது. அப்போது நித்திஸ் ரெட்டியுடன் சேர்ந்து 127 பார்ட்னர்ஷிப் அமைத்த சுந்தர் 50 (176) ரன்கள் அடித்து இந்தியாவை குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். அந்த ஆட்டத்தில் வெறும் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த அவர் 176 பந்துகளை நங்கூரமாக எதிர்கொண்டு விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பாடம் எடுக்கும் வகையில் பேட்டிங் செய்தார் என்று சொல்லலாம்.
அது பற்றி மஞ்ரேக்கர் பேசியது பின்வருமாறு. “அவரிடம் இதே போன்ற பேட்டிங்கை ஆஸ்திரேலியாவில் நாம் முதல் போட்டியிலேயே பார்த்தோம். அதனால் அவர் மீது கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனாலேயே அவர் அந்தப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். அவருடைய ஆட்டம் இந்தியாவுக்கு உதவியது. அவர் மற்ற பேட்ஸ்மேன்களை விட கொஞ்சம் வித்தியாசமாக வெள்ளைக் கோட்டுக்குள் நின்று விளையாடுகிறார்”
“அதனால் பின்னங்காலில் விளையாடும் போது அவர் சில நேரங்களில் ஸ்டம்பில் உரசுவது போல் தெரிந்தது. அந்தளவுக்கு அவர் பந்தை தாமதமாக விளையாடுகிறார். இந்தப் பையன் எப்படி இவ்வளவு திறமைகளை கொண்டுள்ளார் என்று நான் எப்போதும் ஆச்சரியமடைந்துள்ளேன். அவர் ஒரு ஆஃப் ஸ்பின்னர். சொந்த மண்ணில் அவர் அஸ்வினுக்கு பதிலான மாற்று வீரராக வந்துள்ளதை நாம் பார்த்தோம்”
இதையும் படிங்க: 6 சதம், எழு 90ஸ்.. ரிஷப் பண்ட்டை இதுக்காக குறை சொல்லுங்க ஆனா விமர்சிக்காதீங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் ஆதரவு
“அப்படியே இங்கேயும் அவர் நன்றாக பேட்டிங் செய்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் சுந்தர் நன்றாக விளையாடுகிறார்” என்று கூறினார். அந்த வகையில் அஸ்வின் இடத்தை மற்றொரு தமிழக வீரரான சுந்தர் நிரப்பினால் அது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாகும். ஆனால் அதற்கு இந்திய அணி நிர்வாகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.