அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 6ஆம் தேதி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட அந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வென்ற இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் இப்போட்டியில் விளையாடும் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதை அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு ஸ்டார்க் வேகத்தில் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் கோல்டன் டக் அவுட்டானார். இருப்பினும் இரண்டாவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் 37 ரன்களில் ஸ்டார்க் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அவருடன் சேர்ந்து விளையாடிய சுப்மன் கில் 31 ரன்களில் போலண்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார்.
இந்தியா தடுமாற்றம்:
அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வழக்கம் போல பவுண்டரியுடன் ஆட்டத்தை துவங்கினாலும் ஏழு ரன்களில் ஸ்டார்க் வேகத்தில் ஸ்மித்திடம் எட்ஜ் கொடுத்து அவுட்டானார். அதற்கு அடுத்ததாக வந்த கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களில் அவுட்டானார். அதே போல மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாட முயற்சித்த ரிஷப் பண்ட் 31, அஸ்வின் 22 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
அதனால் இந்த பதிவிடும் போது இந்தியா 140-6 என தடுமாறி வருகிறது. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலங்களில் தடுமாறி வந்த விராட் கோலி இத்தொடரின் முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பினார். அதனால் இப்போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் மீண்டும் அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்தில் எட்ஜ் கொடுத்து அவுட்டானது ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் ஏமாற்றமாக அமைந்தது.
கோலியின் அடம்:
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விராட் கோலி அவுட் சைட் ஆஃப் பந்துகளை வம்படியாக சென்று கவர் டிரைவ் அடிக்க முயற்சித்து அவுட்டாவதே சரிவுக்கு காரணம் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் அதிருப்தியை தெரிவித்துள்ளார். அதனாலேயே விராட் கோலியின் பேட்டிங் சராசரி 48க்கு சரிந்துள்ளதாகவும் அவர் ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கையில் கருப்பு பட்டையுடன் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி – காரணம் இதோ
“அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளுக்கு எதிராக துரதிஷ்டவசமாக பலவீனத்தை கொண்டிருப்பது விராட் கோலியின் பேட்டிங் சராசரி 48 ஆக குறைவதற்கு ஒரு முக்கிய காரணம். ஆனால் அதை சமாளிப்பதற்கு வேறு வழியை முயற்சிக்காமல் அவர் பிடிவாதம் பிடிப்பது மற்றொரு முக்கிய காரணம்” என்று கூறினார். இதை அடுத்து இந்த போட்டியிலும் வெற்றிக்காக இந்திய அணி போராடி வருகிறது.



