சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி துவங்கியது. அதில் டாஸ் வென்று முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்ததாக விளையாடும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 9-1 என விளையாடி வருகிறது. முன்னதாக இந்த போட்டியில் சுமாரான ஃபார்மில் இருப்பதால் கேப்டன் ரோஹித் சர்மா தன்னைத்தானே விலகிக் கொண்டார். அணியின் நலனுக்காக சுயநலமின்றி அவர் இந்த முடிவை எடுத்ததாக ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்தார். இருப்பினும் ரோகித் நீக்கப்பட்டாரா, ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதா என்று இந்திய அணி தெளிவாக அறிவிக்கவில்லை.
ரகசியம் எதுக்கு:
இந்நிலையில் விராட் கோலி அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் அல்லாத ரோகித் சர்மாவின் நிலைமையை மறைக்காமல் இந்திய அணி தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “இந்திய அணிக்காக ரோஹித் சர்மா சரியான விஷயத்தை செய்துள்ளார்”
“ஆனால் அவருடைய விஷயத்தை இழுத்து மடிப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. டாஸ் வீசும் போதும் விவாதிக்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட்டை உருவாக்கிய ரசிகர்களுக்கு நாம் இந்த விஷயத்தை பகிர வேண்டும். பும்ரா டாஸ் வீச வந்த போது ரோகித் சர்மாவுக்கு என்னவாயிற்று அவர் வெளியே சென்று விட்டாரா அல்லது நீக்கப்பட்டாரா என்ற குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டது”
கிரேட் கிடையாது:
“அது பற்றி டாஸ் வீசும் போது கேட்கப்படாதது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. நான் களத்தில் சில முறை அது பற்றி கேட்டுள்ளேன். ரோகித்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்பதே அதிகாரப்பூர்வமான அறிக்கையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் அதை ரசிகர்கள் நம்புவார்களா. ஏனெனில் நியூசிலாந்து தொடருக்குப்பின் முதல் போட்டியில் ஓய்வெடுத்த அவர் உள்ளூரிலும் விளையாடவில்லை”
இதையும் படிங்க: மாடு மேய்க்கலாம் போலயே.. இந்தியர்கள் உங்கள மாதிரி அழ மாட்டோம்.. ஆஸிக்கு கவாஸ்கர் பதிலடி
“இது தான் இந்திய கிரிக்கெட்டின் கலாச்சாரத்தில் இருக்கும் எனக்கு பிரச்சனை. இந்திய ரசிகர்களிடம் முக்கியமான விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டியதில்லை. சொல்லப்போனால் அதை ரகசியமாக வைக்கும் அளவுக்கு ரோஹித் சர்மா ஆல் டைம் கிரேட் பிளேயர் கிடையாது. ஒருவேளை அது விராட் கோலியாக இருந்தால் நான் புரிந்து கொள்வேன். ஆனால் 60+ போட்டிகளில் 40 என்ற சராசரியுடன் வெளிநாட்டில் வெறும் ஒரு சதம் மட்டுமே அடித்த ரோஹித் சர்மா விஷயத்தை ரகசியமாக வைத்திருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” எனக் கூறினார்.



